சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளுக்கு நல்லாட்சி வேட்டு வைக்காது : இணைப்பாளர் அஸ்வான்!

Aslam S.Moulana
சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் வேட்டு வைக்காது என முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Aswan
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் நசுக்கி ஒடுக்கப்பட்டதை நாம் இலகுவில் மறந்து முடியாது. அந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் மெது கருணை காட்டவில்லை. அத்தகைய ஒரு கொடுங்கோல் ஆட்சி எமது நாட்டில் இனி ஒருபோதும் ஏற்பட இடமளிக்கக் கூடாது.
தற்போது இந்த நல்லாட்சியில் அனைத்து சமூகத்தினரும் மிகவும் நிம்மதியுடன் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்ததகைய ஒரு நல்லாட்சியின் சொந்தக்காரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பதை நாம் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம். அவர் ஒருபோதும் சிறுபான்மையினரை புறமொதுக்கி, அவர்களுக்கு அநீதியிளைக்கும் வகையில் நடந்து கொள்ளமாட்டார். 
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தந்தபோதிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பிரதான கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்ற தூர நோக்கிலேயே சுதந்திரக் கட்சியையையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை நிறுவினார்.
ஆனால் மஹிந்த தரப்பினர் சிறு சிறு பிரச்சனைகளை பூதாகரமாக்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அவர்கள் மக்கள் மத்தியில் நல்லாட்சி தொடர்பில் பிழையான கருத்துகளை விதைத்து வருகின்றனர். இந்த சதிகளை முறியடித்து நல்லாட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கட்சி ஆதரவாளர்களை மாத்திரமல்லாமல் நாட்டின் அனைத்து பிரஜைகளையும் சாரும். அதற்காக மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைளை கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.