இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் மற்றும் கைதிகள் பட்டியல் இன்று பரிமாற்றம் !

india-pak_20
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் மற்றும் கைதிகள் பட்டியல் இன்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும், இந்த ஒப்பந்தம் 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஆண்டின் முதல் நாளில் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன. 

அந்த வகையில், 25-வது ஆண்டாக இந்த ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் இன்று பரிமாறிக்கொண்டன. ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் இந்த பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. 

இதேபோல் கைதிகள் பட்டியலையும் இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. இதன்படி பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகள் பற்றிய தகவல் இந்தியாவிற்கும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் பற்றிய விபரம் அந்நாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

கைதிகள் பரிமாற்றம் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது, ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.