(வீடியோ) சட்டவிரோத காணிப்பிடிப்பு சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு அமீர் அலியின் பதிலடி !

 

 

Untitled_Fotor

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வாழைச்சேனை நாவலடி, வாகனேரி ,புனானை ஆகிய பிரதேசங்களில் வனபரிபாலன தினைக்களத்திற்குச் சோந்தமான அரச காணிகளை அத்துமீறிய பொது மக்கள் தம்மகப்படுத்துவது தொடர்பில் மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதிக்கு அணிலை விட்டு மாம்பழம் ஆய்கின்ற வேலையைச் செகின்றார்கள் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். குறிப்பிட்ட சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலே இவர் இதனைத் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியை அண்டிய பிரதேசங்களான நாவலடி, வாகனேரி, புனானை ஆகிய பிரதேசங்களில் வனப்பரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமான அரச காணிகளை அத்துமீறி பொதுமக்கள் தம்மகப்படுத்துவது தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை ஒரு சில அரசியல்வாதிகளும் மதகுருமார்களும் தெரிவிக்கின்றார்கள். இதுதொடர்பில் கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

கவர் போட்டோ_Fotor

இந்த காணி அபகரிப்பு தொடர்பில் இந்த மாவட்டத்தின் அரசியல் ரீதியான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டவன் என்கின்றவகையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செவ்வனே செய்துள்ளேன்.; என்பதனை இவர்கள் அறிந்திருந்தும் உண்மைக்குப் புறம்பாக பொய்யான செய்திகளை வெளியிடுவதானது அரசியல் வங்குரோத்துத்தனத்தின் வெளிப்பாடாகும்.

இந்தவிடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் ‘அணில் விட்டு மாம்பழம் ஆய்கின்ற’ வேலையைச் செய்கின்றார்கள். ஆனால் நானோ இந்த நாட்டின் ஜனாதிபதியுடன் இந்த விடயம் பற்றி கலந்துரையாடியுள்ளேன் என்பதை இவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை.

உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்தியானது தமிழ் ஊடகங்களில் ஒருவாறும் சிங்கள ஊடகங்களில் வேறுமாதிரியும் வெளியிடப்பட்டது தெரியாமல் திட்டமிட்டு சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளை விடுவது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலி உண்ணுவதையும் உறங்குவதையும் அரசியல் விமர்சனமாகப் பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக தமிழ் ஊடகங்களில் அந்தப் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களும்  காணி கையகப்படுத்தலில் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான அவர்களின் வாக்குமூலத்துடனான செய்தியை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

04_Fotor

சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்பார்வை குறைபாடு பற்றி ஓரளவு நான் அறிவேன். ஆனால் அவர்களுக்கு காதும் கேட்கவில்லையென்பதை அவர்கள் விடுக்கின்ற அறிக்கைகள் மூலம் தெளிவாகின்றது. என்னைப்பொறுத்தமட்டில் மட்டு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் இரண்டு சமூகமும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்போடும் வாழ வேண்டும் என்பதை விரும்புகின்றவன்  இதனடிப்படையில்தான் இந்த இரு சமூகங்களுக்குமிடையிலான எல்லை ரீதியான பிணக்குகளைத் தீர்க்குமாறும் அவற்றுக்கு விரைவில் தீர்வைப்பெற வேண்டும் என்றும் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அதுவே இரண்டு சமூகங்களும் பரஸ்பர ஒற்றுமையோடும் நம்பிக்கையோடும் வாழ்வதற்கான மிகச் சிறந்த நடவடிக்கையாக அமையும்.

ஆனால் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்த முனைவதை நான் ஆதரிக்கவோ அல்லது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ இல்லையென்பதை இந்த இடத்தில் இந்த அரசியல் தலைமைகளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

தேர்தல் காலங்களில் பட்டிருப்பு தொகுதியெங்கும் எனக்கெதிரான விசமப்பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. அதிலே பட்டிருப்பு தொகுதியெங்கும் அமீர் அலி பள்ளிவாயல்களைக் கட்டப்போகிறார் என்று என்மீது சேறு பூசி தமிழ் சகோதரர்களையும் என்னையும் பிளவுபடுத்தி அதில் குளிர்காய முனைந்தார்கள். அவ்வாறுதான்; இந்தக் காணி கையகப்படுத்தல் தொடர்பான விடயமும் என்மீதும் எனது அரசியல் பயணத்தின்மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களின் பொய்யான இவ்வாறான பரப்புரைகள் எனக்கொரு பொருட்டல்ல. எவராக இருந்தாலும் காணிகளைப் பெறுவதென்பது அரச அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் அரச காணி வழங்கல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நீதியான முறையிலும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஆனால் பலவந்தமாக அரச காணிகளை கையகப்படுத்த முனைவதானது முட்டாள்தனமான செயற்பாடு என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 28.12.2015 அன்றைய தினம் என்னுடைய கட்சித் தலைவர் கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களுக்கும் ஆனந்த சாகர ஹிமி என்பவருக்கும் இடையில் வில்பத்து காணி தொடர்பான விவாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற இருந்த வேளையில், அதே தொலைக்காட்சி நிறுவனத்தால் ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாத வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த மதகுருவை அனுப்பி வைத்து அந்த மதகுருவின் மூலமாக எனக்கு சேறு பூச முனைந்ததானது அந்த மதகுருவின் ஆடைக்கும் பதவிக்கும் கண்ணியத்திற்கும் அந்தஸ்துக்கும் பொருத்தமற்ற செயலாகவும் இதனை ஏற்பாடு செய்த ஊடகத்தின் ஊடக தர்மத்தையும் கேள்விக்குட்படுத்த நான் விரும்புகிறேன்.

இச்செய்தியானது எமது கட்சியின் தலைவர் கௌரவ. அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது விவாதத்தை மலினப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும். இந்தச் செயற்பாடு எமது சமூகத்திற்கும் அவருக்குமெதிரான சதியாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் அன்றைய தினம் இந்தச் செய்தியை வெளியிட துணைபோனவர்கள் மிகவும் சங்கோஜப்பட்டுப் போனார்கள் என்பதை அந்த இடத்தில் நின்று அவதானித்தவன் என்றவகையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த காணி அபகரிப்பு தொடர்பில் மாவட்ட ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நான் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளேன் என்பதனை அந்தந்த அதிகாரிகளோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிழையாக செய்தியை வெளியிட்ட ஊடகங்களும் தொடர்புகொண்டு கேட்பார்களேயானால் அவர்கள் கூனிக்குறுகிப் போய்விடுவார்கள்.

கடந்த ஆட்சியின்போது இதே காவி உடை தரித்த சிலரின் மதவாதப் போக்குகளினாலும் துவேச நடவடிக்கைகளினாலும் அந்த அரசு வீழ்ச்சி கண்டது. முன்னரைப் போலவே காவி உடை தரித்து இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளியிட்டு இந்த நல்லாட்சியை மலினப்படுத்த எடுக்கும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.