தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதன் பின்னரே நாம் முடிவெடுப்போம் : உதய கம்மன்பில !

uthaya

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதற்கு தினேஷ் குணவர்தன தலைமையிலான பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் என  சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இருப்பினும், கூட்டணி என்ற வகையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என அதன் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக்கொண்டு பொது எதிர்க்கட்சியால் புதியதொரு கூட்டணி உருவாக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணி அமைத்து பொது எதிர்க்கட்சி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“புதிய கூட்டணியை (எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி) அமைத்து அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தத் தீர்மானத்தையும் நாம் இதுவரை எடுக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடாது தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தனித்துப் போட்டியிட விரும்புகின்றன. நானும், தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகின்றேன். இருப்பினும், இது தொடர்பாக பொது எதிர்க்கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதன் பின்னரே நாம் முடிவெடுப்போம்” – என்றார்.