எம்.வை.அமீர்
நிந்தவூரில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இருபதாவது ஆண்டு நிறைவு மாநாட்டில் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 1988ஆம் ஆண்டு எழுச்சிக் குரல் மற்றும் நவமணி பத்திரிகைகள் ஊடாக எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தவர்.(2015-12-27)27 வருட ஊடக சேவையை இவர் பூர்த்தி செய்துள்ளார்;.
இப்போது இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக கடமையாற்றுகின்றார். பதினைந்துக்கும்மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக கடமை புரிகின்றார்.
2010ஆம் ஆண்டு ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய சிறந்த ஊடகவியலாளருக்கான போட்டியில் சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்ரமணியம் செட்டியார் தேசிய விருதை வென்றவர்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை ‘மெட்ரோ நியுஸ்” பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் தொடர்ச்சியாக 125 வாரங்கள் கட்டுரைகளை எழுதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய சிறந்த ஊடகவியலாளருக்கான போட்டியில் 2012ஆம் ஆண்டின் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.
மேலும் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமாவார். இவர் பீர்முகம்து ஆமீனா உம்மா தம்பதியின் புதல்வராவார்.