உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தில் எமது திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பை நாங்கள் பகிஷ்கரிப்போம். சிறுபான்மை கட்சிகளும், சிறு கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் திருத்தங்களை முன்வைத்துள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹசனலி வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது. கேள்வி: தேர்தல் மறுசீரமைப்பு உள்ளடக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் உத்தேச வரைபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. அதில் 238 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? பதில்: தேர்தல் முறை மாற்றம் சம்பந்தமாக சிறுபான்மைக் கட்சிகள் பாராளுமன்றத்திலுள்ள எல்லாத்தரப்பும் சிங்கள, முஸ்லிம்,தமிழ் கட்சிகள், இனம் சம்பந்தமான கட்சிகள், ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மூன்று கூட்டங்களை தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக நடத்தியுள்ளோம். அந்தக் கூட்டத்தில் நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால், எந்த தேர்தல் முறை அமுலுக்கு வந்தாலும் சிறுபான்மைக் கட்சிகள் கொடுக்கின்ற ஆலோசனைகளை, சிபாரிசுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் எந்த தனிப்பட்ட நோக்கங்களும் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்கள் அதை முற்றாக நிராகரிப்போம். எங்களுடைய பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் எதிர் பார்ப்பு சிறுபான்மைக்கட்சிகளின் பிரதி நிதித்துவம் பாராளுமன்றத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஏனெனில், அவர்கள் எமது நாட்டில் இரு தசாப்தங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தத்திற்கு காரணம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமையே என்று நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். கேள்வி: நீங்கள் தனியாக ஒரு தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக சிபாரிசு திட்டமொன்றை முன்வைத்துள்ளீர்களா? பதில்: நாங்கள் தனியாக ஒரு சிபாரிசு திட்டத்தை முன்வைக்கவில்லை. ஏனெனில், தெற்கிலுள்ள சிங்களவர்கள் அதை வித்தியாசமாக பார்ப்பார்கள். எனவே பிரதான கட்சிகள் முன்வைக்கும் திட்டத்தில் நாங்கள் திருத்தங்களை முன்வைப்போம். அவர்கள் முன்வைக்கும் திட்டத்தை நாங்கள் நன்கு ஆராய்ந்து அதில் சிறுபான்மை நலனுக்கான திருத்தங்களை முன்வைப்போம். அதில் 50 தொகுதிவாரி, 50 விகிதாசார முறை கொண்ட தேர்தல் மறுசீரமைப்பு ஒன்றை எதிர்பார்க்கின்றோம். அவற்றில் சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும், மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை வழங்கக் கூடிய முறையொன்றே எங்களுக்கு வேண்டும். 10 சதவீதம் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்தால் 25 உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும். கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிபாரிசு திட்டத்தை நீங்கள் ஆராய்ந்தீர் களா? பதில்: இல்லை. அது இன்னும் ஆலோசனை மட்டத்தில் தான் இருக்கின்றது. எங்களிடம் இன்னும் வரவில்லை. கேள்வி: அப்படிப் பார்க்கும் போது தேர் தல் மறுசீரமைப்பு திட்டம் நிறைவேற்றப்பட இன்னும் தாமதமாகுமல்லவா? பதில்: இல்லை. இதில் இரண்டு விதமுள்ளது. இருக்கின்ற எல்லைகளை மீள் நிர்மாணம் செய்வது என்றால் நீண்ட காலம் எடுக்கும். ஆனால், அந்த எல்லைகளை தொடாமல் இருக்கின்ற எல்லைகளில் உறுப்பினர்கள் தொகை அதிகரிப்பதற்கு இரண்டை தொகுதி முறை,அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தொகுதி ஆகியவற்றை உருவாக்க முடியும். அது இல்லாமல் 14ஆவது திருத்த சட்டமூலமொன்றை முன்னர் கொண்டு வந்தார்கள். அதாவது, வலயங்கள் அமைப்பினை கொண்டு வருவதன் மூலம் பழைய அமைப்புகளில் கை வைக்காமல் தேர்தல் முறைமையை மாற்றலாம். எனவே, எது வந்தாலும் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து திருத்தங்களை முன்வைப்போம். கேள்வி: 100 நாள் வேலைத்திட்டத்தில் கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயலணியொன்றை அமைப் பதாக உறுதியளித்திருந்தார். அந்த செயலணி அமைக்கப்பட்டு விட்டதா? முஸ்லிம்களின் காணிகள் மீளக்கையளிக்கப்பட்டு விட்டனவா? பதில்: இந்த 100 நாள் திட்டத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை எட்ட முடியாது. அதாவது சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு ஒரு ஆரம்பம் தான் இந்த 100 நாள் திட்டத்துக்குள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள், வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் காணி விடயங்களில் பூரணமான ஒரு ஆவணத்தை தயாரித்துள்ளோம். இந்த ஆவணத்தில் 14 கண்டங்கள் இருக்கின்றன. ஒரு கண்டத்தில் 3,000 முதல் 4,000 ஏக்கர் வரையான விபரங்கள் இருக்கின்றன. இந்த ஆவணத்தை நாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளோம். அத்துடன் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதையும் சேர்ந்துக் கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு அவர் இந்தக் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனி நபர் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த தனி நபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆவார். இவர் இப்போது வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பாக கவனத்தை செலுத்தி வருகின்றார். இந்த நடவடிக்கை முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாண காணிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில் ஹிங்குரான சீனித் தொழிற்சாலை பிரச்சினையொன்று எமது விவசாயிகளை பாதித்துள்ளது. இந்த விவசாயிகளை கரும்புச் செய்கை மேற்கொள்ளும் படி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். காணி உரிமையாளர்களின் அனுமதியின்றி அத்துமீறி காணிகளுக்குள் நுழைந்து உழவு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவை கரும்பு செய்கைக்கான காணிகள். நீங்கள் கரும்பு பயிர்ச்செய்கை மேற்கொள்ளத்தான் வேண்டும் என்று காணி உரிமையாளர்களை கட்டாயப்படுத்தியும் வருகின்றனர். எங்களுடைய காணிகளில் கரும்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் அத்துமீறி புகுந்து உழவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். என்று பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றால், பொலிஸார் அதை ஏற்க மறுக்கின்றனர். இந்தக் காணிகள் கரும்பு செய்கைக்கு ஏற்றதல்ல. என்று விவசாய நிபுணர்கள் அறிக்கை வழங்கியிருக்கின்றார்கள். அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் சில விவசாயிகள் கரும்புச் செய்கை மேற்கொண்டு நட்டமடைந்துள்ளனர். இது விடயம் தொடர்பாக கடந்த வாரம் அமைச்சர் கே.வேலாயுதத்தை பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கரும்பு கூட்டுத்தாபன அதிகாரிகளையும் விவசாயிகளையும் ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி இதற்கு தீர்வு காணும்படி நாங்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். எங்களுடைய பிரச்சினையை அமைச்சர் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார். எங்களது விவசாயிகளின் மொழியை புரிந்துகொள்ளக் கூடிய அமைச்சரொருவர் இப்போதுதான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரசாங்கத்தில் எங்களுக்கு பூரண நம்பிக்கையிருக்கின்றது. எனவே இந்த விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த அரசாங்கம் ஸ்திரமானதாகவிருந்தால் எமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடமுடியும். கேள்வி: இந்த தற்காலிக அரசாங்கம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக பெரும்பான்மையின கட்சி கள் குற்றம் சுமத்தி வருவதையும் காணக் கூடியதாகவுள்ளதே? பதில்: இப்போது இந்த நிலை குறைந்துள்ளது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையின கட்சிகள் அதுவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வாக்களித்த கட்சிகள், மேடைகளில் தற்போதைய ஜனாதிபதியை திட்டித் தீர்த்த கட்சிகள் அனைத்தும் இந்த வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்து வாக்களித்தனர். கட்சிகள் ஒன்று சேர வேண்டிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, பொதுபலசேன அமைப்பு போன்றவற்றின் இனவாதத்துக்கு மெருகூட்டக் கூடிய தலைமைத்துவம் அப்போது இருந்தது. அந்த தலைமைத்துவத்தை புரிந்துகொண்ட அரச அதிகாரிகள் கூட அதே போக்கை கடைப்பிடித்தனர். சில பத்திரிகைகள் சிறு விடயங்களைக் கூட ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தன. அப்படியொரு நிலை இப்போது இல்லை. இனவாதத்தை தூண்டும் கட்சிகள் அடுத்த பொதுத்தேர்தலில் காணாமல் போய் விடும். இவர்கள் மீதான ஊழல் மோசடிகள் விசாரணைக்கு வரும் போது இவர்களின் கதாநாயகன் போன்ற மாயை நிலை நீங்கிவிடும். கேள்வி: கிழக்கு மாகாணத்தில் ஒரு சில வைத்தியசாலைகளே மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. பிரதி சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் வேறு சில வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? பதில்: கடந்த மாதம் கிழக்கிலுள்ள சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டேன். அந்த வைத்தியசாலைகளின் குறை நிறைகளை கேட்டறிந்து ஒரு அறிக்கையொன்றை தயாரித்துள்ளேன். வைத்தியசாலைகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை மத்திய அரசால் மேற்கொள்ள முடியாது. மாகாண அமைச்சிலுள்ள அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். எனது விஜயத்தின் போது வடக்கு, கிழக்கிலுள்ள வைத்தியசாலைகள் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்துகொண்டேன். கொக்கட்டிச்சோலை போன்ற பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் சென்றேன். எந்தவொரு அமைச்சரும் கால் வைக்காத வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்தேன். சில வைத்தியசாலைகளில் ஆண் நோயாளர்களும் பெண் நோயாளர்களும் ஒரே வார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சில வைத்தியசாலைகளில் அகதி முகாம்களைப் போல் நோயாளர்கள் கீழே தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். சில இடங்களில் நோயாளர்களின் மெத்தைகள் கிழிந்து படுமோசமாக காணப்பட்டன. இவற்றுக்கு பெரிய செலவுகள் ஆக போவதில்லை. இவையனைத்தும் திட்டமிட்ட புறக்கணிப்பு என்றே கருதவேண்டியுள்ளது. மாகாண அரசுக்கு இவற்றை சீர்திருத்த மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதற்காகவேதான் நாங்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி கோரிக்கை விடுக்கின்றோம். எமது அமைச்சர் 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். அவரது அனுமதியின் பேரிலேயே நான் கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டேன். நான் வழங்கிய தகவல்களை பார்த்து அவர் ஆச்சரியமடைந்தார். எனது அறிக்கையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார். அதே போல் வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்தேன். வடக்கு மாகாணத்தில் தேசிய அரசின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மாத்திரமே இருக்கின்றது. ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் இயங்குபவை. இந்த வைத்தியசாலைகள் அனைத்தும் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதை இந்த விஜயத்தின் போது நேரடியாக அறிந்துக்கொண்டோம். வவுனியா, சாவகச்சேரி போன்ற வைத்தியசாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. வவுனியா வைத்தியசாலை வட மாகாண சபையின் கீழ் இயங்கிய போதும் மத்திய அரசிடமிருந்து பல உதவிகள் வழங்கப்படுகின்றன. இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. இதே போல் மன்னார் வைத்தியசாலைக்கும் மத்திய அரசு உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். மன்னார் ஒரு மாவட்டத்தின் தலைநகர். அங்கு தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இதனால் தான் அந்த வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. கிழக்கில் மகாஒயா என்ற இடம் ஒரு சிறிய பிரதேசமாகும். இங்குள்ள வைத்தியசாலைக்கு பாரிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகளில் பாராபட்சம் காட்டக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு ஆகும். |