ஹாசிப் யாஸீன்
பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று செயற்படுகின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல், தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டம் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.வாசித் தலைமையில் பொத்துவில் முஸ்லிம் மத்திய கல்லூரி கூட்ட மண்டபத்தில் நேற்றிரவு (26) சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு பிரதான உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்; அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டம் பற்றி கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் உயர்மட்டக் கூட்டம் கல்வி அமைச்சர் அகிலவி ராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டது. அதில் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் உள்வாங்கப்படாமல் இருந்தது. இதனை அவதானித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், ஆத்திரமடைந்து கல்வி அமைச்சருடன் விவாதித்து, அதிகாரிகளுடன் முரண்பட்டு, வேறு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த என்னையும் அழைத்து வந்து பேச வைத்து இவ்வாறு பொத்துவில் பிரதேச பாடசாலைகளை இத்திட்டத்தின் கீழ் உள்வாங்குவதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.
கெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை அமுல்படுத்தி பொத்துவில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர்ப்பாசன அமைச்சுக்கான குழுநிலை விவாத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸூம் நானும் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றி நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா உள்ளிட்டவர்களுக்கு விரிவான விளக்கத்தை கொடுத்து இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்குரிய அனுமதியினை பெற்றுள்ளோம்.
பொத்துவில் விளையாட்டு மைதான அபிவிருத்திற்கு நிதிகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் வைத்தியசாலையின் அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் இணைந்து செயற்படுகின்றனர்.
பொத்துவில் மக்களின் குடிநீர் பிரச்சினை இன்னும் ஆறு மாத காலத்தினுள் தீர்;த்து வைக்கப்படும். ஏனைய பிரச்சினைகளான ஆசிரியர் பற்றாக்குறை, நிலச் சுரண்டல்கள், புதிய வலயக் கல்வி அலுவலக உருவாக்கம், சுகாதாரம் போன்ற சகல விடயங்களிலும் கட்சியின் தலைமை உட்பட கட்சியின் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண அமைச்சர்களும் கவனமெடுத்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.