பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்புரியை உறுதி செய்யும் நோக்கில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தங்கள் !

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
faizer musthafa
தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்புரியை உறுதி செய்யும் நோக்கில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்களுக்கு தேவையான பொது வசதிகளை வழங்க பிரதேச சபை நிதியை பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. 
 
இந்த விடயம் குறித்து அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்ற அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். 
 
இதன்படி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 
 
விரைவில் இந்த சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சட்ட திருத்தங்களின் பின்னர் பெருந்தோட்ட குடியிருப்புக்களுக்கு பொது வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பிரதேச சபை நிதியைப் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.