சுகாதார பணியாளர்கள் நியமனங்கள் யாவும் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவே வழங்கி வைக்கப்பட்டது !

எம்.ஐ.எம்.றியாஸ், அபு அலா –

 

 கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு மற்றும் கிராமிய மின்சார அமைச்சின் 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால்  (23) அமர்வின்போது முன்வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான 3ம் நாள் வரவு செலவுத்திட்ட இறுதிநாள் சுகாதார அமைச்சின் வரவு செலவுத்திட்டம் பதில் தவிசாளர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டவைகளாவன,

nazeer th_Fotor

கிழக்கு மாகாண சபை வரலாற்றில் ஏனைய அமைச்சுக்களைப் போன்று எமது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடுகள் 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலைமையில் இருக்கின்றன. இவ்வருடங்களில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளில் கட்டுநிதியாக சுமார் 60 வீதம் மாத்திரமே குறிப்பிட்ட 3 வருடங்களிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக எமது அமைச்சினூடாக அபிவிருத்திப் பணிகளை கணிசமான அளவி எம்மால் முன்னெடுத்துச்செல்ல முடியாமல் போய்விட்டது.

எமது அமைச்சினதும் மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்குமென 2015 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மூலதனச் செலவுக்கான நிதி ஒதுக்கீடாக PSDG இன் மூலம் கிடைக்கப்பெற்ற 291 மில்லியன் ரூபாவும், CBG இன் மூலம் 30 மில்லியன் ரூபாவுடன் மொத்தமாக 321 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப்பெற்றது. அத்துடன் மீண்டெழும் செலவுகளுக்காக 49.4 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 370.4 மில்லியன் ரூபாய்கள் நடப்பு வருடத்தில் கிடைக்கப்பெற்று செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வமைச்சிற்கும் ஏனைய திணைக்களங்களுக்கும் குறிப்பிடத்தக்களவு 2016 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகையானது நடப்பு வருடத்தைவிட அதிகரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. PSDG இன் மூலம் 870 மில்லியன் ரூபாவும், மூலதனச் செலவுக்காகவும், மீண்டெழும் செலவுக்காக 47.3 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வழமைபோல் இந்நிதிகளைக் கொண்டு எமது மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்கும் சனத்தொகையின், தேவைகளின் முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு எமது சேவைகளையும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள எமது அமைச்சு திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை இவ்வுயர்சபையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் மிக நீண்ட காலமாக எமது அமைச்சிலும் மற்றும் எமது அமைச்சின் கீழ் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களுக்கான பதவியுயர்வுகள் மற்றும் நியமனங்கள் காலம் கடந்தும் வழங்கப்படாமல் இருந்து வந்தன. இதனை உடனடியாக வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளையும் எமது அமைச்சு முன்னெடுத்து நியமனங்களையும், பதவியுயர்வுகளையும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் வழங்கி வைத்தோம்.

இப் பதவியுயர்வுகள் மூலம் அப்பதவித் தரங்களுக்கான சம்பளத்திட்டமும் நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த வருடம் (2015) எமது அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் நியமனங்கள் யாவும் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவே வழங்கி வைக்கப்பட்டது என்பதை இச்சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்நியமனங்களை உரிய முறையில் பின்பற்றி வழங்கியமைக்காக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றியையும் இவ்வுரிய சபையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.