சப்றின்
வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக உருவாக்கப் பட்டுள்ள சட்டமூலத்தினை அரசாங்கம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் பிட்போடப்பட்டுள்ளமையானது சிறுபான்மைச் சமூகத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறதா என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். எம். சபீஸ் விளக்கம் கோரிய மனு ஒன்றை (22.12.2015) மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
இச்சட்டமூலம் தொடர்பாக பொது பல சேனா அமைப்பினால் மனித உரிமை ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்ட மனு மீது 24 மணித்தியாலத்துக்குள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை சிறுபான்மைச் சமூகத்தை மீண்டும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது. அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவங்களில் ஏற்பட்டுள்ள வடுக்கள் இன்னமும் சிறுபான்மை மக்களின் மனதில் இருந்து அகலவில்லை. அம்மக்ளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்களும் வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. மாண்டவர்கள் மீண்டும் எழும்ப மாட்டார்கள் என்ற உறுதியோடும் தாம் இழந்த சொத்துக்களை நம் கைகள் கொண்டு உருவாக்கினால் அன்றி வேறு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனும் மக்கள் தமது வாழ்கையை துவங்கி உள்ளார்கள்.
இருந்தாலும் தமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்பில் இருந்த மக்கள் இனவாதத்தினை கைகட்டி பார்வையாளர்களாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் கரிசனையோடு இருந்து வருகின்றனர் அதன் அடிப்படையில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த எண்ணி மாற்றமும் செய்தனர். ஆட்சி மாற்றத்தின் பயனால் அரசாங்கம் வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் சட்டத்தினை தயார் செய்துள்ளது.
ஆனால் காட்டுமிராண்டித்தனமாக அசிங்கமான இனவாத பேச்சுக்களால் மக்களைத் தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்திய பொது பல சேனா இச்சட்டம் தமக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதனால் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இச்சட்ட அமுலாக்கத்துக்கு எதிராக மனுவைக் கையளித்தது இம்மனுவின் பிரகாரம் 24 மணித்தியாலத்துக்குள் அரசாங்கத்துக் அறிக்கைவிட்ட மனித உரிமை ஆணைக்குழு 18 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு நீதி பெற்றுக் கொடுக்காதது ஏன்? அளுத்கமை பேருவளை கலவரத்தில் கைது செய்யப்பட்ட 41 பேரில் 26 பேர் நீதி மன்றத்தில் சாட்சிப் படுத்தப் பட்ட போதிலும் அவர்கள் மீதான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் படாமல் இருப்பது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததற்கு என்ன காரணம்?
இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டு பௌத்த மதகுருமார்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கேவைத்தது மனித உரிமை மீறல் இல்லையா? இது தொடர்பாக மனிதஉரிமை ஆணைக்குழு என்ன நடவடிக்கை மேற்கொண்டது ?
மேலும் அரசாங்கம் சட்டம் இயற்றும்போது குற்றம் விசாரிக்கப்படாமல் தண்டனை வழங்கும் விதமாக சட்டக் கோவைகள் அமையுமா? என்பதனை மனித உரிமை ஆணைக்குழு கருத்தில் கொள்ளாதது வேதனையானதாகும். அதேபோல் இனக்கலவரம் ஒன்று நடந்து கொண்டிருக்கும்பட்சத்தில் போர்க்கால அடிப்படையில்தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போது அதன் பிரகாரமே கலவரத்தினை அடக்க முடியும் என்பதனையும் இக்குழு கருத்தில் கொள்ளவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையானது இச் சட்டம் இயற்ற எத்தனிப்பவர்களை தடுக்கும் ஒருபக்கச் சார்பான கருத்தாகவே மக்களால் நோக்கப்படுகிறது
ஆகவே அரசாங்கம் சிறுபான்மை மக்களை காப்பாற்றுவதற்காக கொண்டுவரும் சட்டத்தில் அக்கறைகாட்டும் மனித உரிமை ஆணைக்குழு அளுத்கமை பேருவளைப் பிரேதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்தை தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை துரிதப் படுத்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனக்கோரியே இம் மனு எஸ். எம். சபீசினால் மனித உரிமை ஆணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டடுள்ளது.
எஸ் எம் சபீஸ்
108>மாவடிச்சந்தி வீதி
அக்கரைப்பற்று 21
22.12.2015
மனித உரிமை ஆணைக்குழு
165 கின்சி வீதி
பொரளை
கொழும்பு 08
தகவல் அறிந்து கொள்ளல்
””””””””””””
01
2014 ஜூன் 14ம் திகதி அளுத்கமை பேருவளைப் பகுதிகளில் சிறுபான்மைச் சமூகத்தின் மீது பேரினவாத கடும்போக்காளர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் 3 பேர் மரணித்ததோடு 88 பேர் படுகாயமுற்றதுடன் 600 மில்லியனுக்கும் அதிகமான சொத்து இழப்புக்கள் ஏற்பட்டது
இச்சம்பவத்தின் போது சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பாதுகாப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அப்பாவி பொதுமக்கள் மீது கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதிலும் மனித உரிமை ஆணைக்குழுவினால் 18 மாதங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிபெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளதனை தெளிவு படுத்த வேண்டும்
02
வெறுப்பூட்டும் பேச்சுக்கெதிரான சட்டமூலத்தினை அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இச்சட்டமூலத்திற்கு எதிராக பொது பல சேனா அமைப்பினால் மனித உரிமை ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கத்துக்கு சட்டதிருத்தத்திற்கு பரிந்துரை செய்த ஆணைக்குழு
இதுவரையில் சுமார் 280 க்கு மேற்பட்ட மனித உரிமை மீறல்களை முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ள பொது பல சேனா அமைப்பு தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மனித உரமை ஆணைக்குழு எந்த அறிக்கையும் வெளியிடாதது ஏன்?
மேற்கூறியுள்ள விடயங்கள் சிறுபான்மைச் சமூகத்தின் மீது மனித உரிமை ஆணைக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என எண்ணத் தோன்றுவதால் தனக்கு தகுந்த பதிலைத் தந்துதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
இலங்கைப் பிரஜை
எஸ் எம் சபீஸ்.