சிற்றூழியர் நியமனங்களில் கி.மாகாண சுகாதார தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் !

றியாஸ் ஆதம்

 
கிழக்கு மாகாண சிற்றூழியர் நியமனங்களில்; நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக வைத்தியசாலையில் கடமைபுரிபவர்களுக்கு நியமனம் வழங்கி கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் செயல்படுகின்றது என்பதனை வெளிக்காட்டுங்கள்.

 

uthuman

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,
அண்மையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. இந்நியமனங்கள் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயற்படுகின்றன எனக் கூறி ஆளும் கட்சியினருக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர்களாக வைத்தியசாலைகளில் கடமைபுரிவர்களில் இருந்து ஒரு தொகுதியினருக்கு நியமனங்கள் வழங்கி தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கலாம். எனவே எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வழங்கப்படும் சிற்றூழியர் நியமனங்களில் கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

 
ஆரம்பகாலத்தில் கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களில் சிற்றூழியர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கூட அமைச்சின் செயலாளர்களுக்கு இல்லாமல் இருந்தது. பலவிதமான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிரகாரமே அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சிற்றூழியர்கள் நியமனம் செய்யும் அதிகாரத்தினை பெற்றுக்கொடுத்தோம்.
முதலமைச்சரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகளில் அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட நியமனங்கள் கூட ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 
கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் நீங்கள் முன் உதாரணமான நடவடிக்கைகளில் செயல்பட வேண்டும். ஆளும் கட்சியாக சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. என்பதனால் எல்லாவற்றிலும் நீதி இல்லாமலே செயற்படுகிறீர்கள். ஆனால் இதற்காக ஒரு நாள் வருந்த வேண்டிவரும் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
ஆளுநர் செயலகமும் கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்படும் நிதிகள் மூன்று சமூகங்களுக்கும், மூன்று மாவட்டங்களுக்கும் உரிய முறையில் சென்றடைகின்றதா? என்பதனை மேற்பார்வை செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் மூன்று சமூகங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையற்ற நிலையை தோற்றுவித்து 2015 ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் சமநிலையில் இல்லாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 2016 ம் ஆண்டில் நீதியாக செயல்பட வேண்டும். 
கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர், அதிகாரிகளின் சிறந்த பணிகளை பாராட்டுகின்றேன். வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காகவே நமது நாட்டில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது. 

 

துரதிஷ்டவசமாக நமது கிழக்கு மாகாண சபைக்கான பேரவைச் செயலகம் நிறைவு செய்யப்படாத நிலைமையில் உள்ளன. நமது நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகளின் பேரவைச் செயலகங்களை பார்க்கும் போது நவீன வசதிகளுடன் பாராளுமன்றங்கள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சகல வசதிகளும் கொண்ட பேரவைச் செயலகம் அடுத்த வருடம் நிறைவு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் வகையில் நமது கிழக்கு மாகாண சபையின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.