அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர், கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதுர்தீன் மீது மீண்டும் மீண்டும் பேரினவாத பாய்ச்சல்களைக் கோடிடும், நாட்டை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகளை சிறுபான்மை மூலம் ஆட்சிக்கு வந்த அரசு இன்னும் கைது செய்யாமலிருப்பது அரசின் சிறுபான்மை முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாட்டையே வெளிக்காட்டுகின்றது.
இலங்கை முஸ்லீம்கள் மீது அவ்வப்போது சிங்களப் பேரினவாதமும் தமது பாய்ச்சல்களை காட்டுவதற்கு தவறுவதில்லை. அதே பாணியில் முஸ்லிம்களின் இன்றைய பிரச்சனைகளை ஒதுக்கித்தள்ளி தலைமைகளை தகாத வார்த்தைகள் மூலம் பேசுவது சிங்கள பேரினவாதிகளுக்கு புதிய ஒன்றல்ல. மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் பிற்பாடு கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் மீதான பாய்ச்சல்களை தமிழ் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் மிகத்திட்டமிட்ட முறையில் நகர்த்தி வருகின்றன. முஸ்லீம்களின் உரிமைகளைப் பற்றி பேசிப்பேசி காலந்தள்ளும் தலைமைகளும் இவ்விடயங்களில் தம்மையும், தமது கதிரைகளையும் காப்பாற்றிக் கொள்வதுடன் அரசியல் ரீதியான எதிரியாகவே கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்களைப் பார்க்கின்றன.
உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களின் உறவுகளும் படுகின்ற வேதனைகளையும், மனக்கிலேசங்களையும் புரிந்து கொள்ளாமல் கிழக்கிலும், மேற்கிலுமாக குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் அரசியல் கைகள் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் கூறியுள்ள அளவிலாவது தமது தேவைகளை இனங்காட்டிக் கொள்ள முடியாமல், சுய தேவைகளில் மூழ்கியுள்ளமை சமூகத்தின் பார்வையில் மிகக் கேவலமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூக கட்டுமானத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் நாம், அந்தச்சமூகத்தின் அங்கத்தவர்களாய் எமக்குள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளைக் கொண்டுள்ளோம். வீணான மாயைகளில் இருந்து விடுபட்டு எமது ஐக்கிய தேசத்தின் இறைமை சிதைக்கப்படா வண்ணம் எமது சமூகத்தின் விடியலை நோக்கிய பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்கென எம் கண் முன்னே இருக்கின்ற ஒரே தெரிவு கௌரவ தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மாத்திரம் தான். நாம் கட்சிகள், இயக்கங்கள் வேறு பிளவுகள் என்ற வரையறைகளுக்குள் இருந்து வெளிவந்து எமது சமூகத்தின் விடிவினை நோக்கி அடி எடுத்து வைக்க திடசங்கற்பம் பூன வேண்டியுள்ளமை இன்றைய காலத்தின் கட்டாயத்தேவையாகும்.
MJ முஹம்மத் அன்வர் நௌஷாத்
அ.இ.ம.க இளைஞர் அமைப்பாளர்