ஒரு சில தலைமைகள் அமைச்சு சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர் !

 

சப்றின்

கண்டி மாவட்டத்தில் 3வது முறையாகவும் மீலாதுன்நபி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது இந்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் பரந்து  வாழும் முஸ்லிம்களை புறம்தள்ளுவது மாத்திரமில்லாமல் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு  செய்யும் துரோகமும் ஆகும் என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் கூறினார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார்.

safees

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் – இவ்வருடத்துக்கான மீலாதுன் நபி விழா கண்டி மாவட்டத்தில் வருகின்ற 28ம் திகதி நடைபெறுகின்றது. அதாவது வருடா வருடம் நடத்தப்படும் மீலாதுன் நபி விழாவுக்காக அரசாங்கம் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தினை  செலவு செய்கிறது. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் இருந்த காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் காணப்படும் முஸ்லிம் பிரதேசங்களின்  அபிவிருத்தியினைக்   கருத்தில் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்படும் இடம் தெரிவு செய்யப்பட்டு வந்தது.  

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இலங்கையின் வசதிகூடிய மாவட்டங்களில்  இரண்டாவதாக  காணப்படும் கண்டி மாவட்டத்தில் 3வது முறையாகவும் மீலாதுநபி விழா நடைபெறுவதற்கான  ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.  இச்செயற்பாடு இந்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் பரந்து  வாழும் முஸ்லிம் மக்களை புறம்தள்ளுவது மாத்திரமில்லாமல் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு  செய்யும் துரோகமும் ஆகும். 

முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு சில தலைமைகள் இவ்விடயங்களைக் கருத்தில் கொள்ளாமல் அமைச்சு  சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். உரியவர்கள் இவ்விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று இவ்வாறான பிழைகள் எதிர்  வரும் காலத்தில் இடம்பெறாவண்ணம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.