மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து , இனவாதச் சூழலியலாளர்கள் கொக்கரிப்பு !

இனவாதச் சூழலியலாளர்கள் வில்பத்துப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்துக் குடியேறுவதாக விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விஷக்கருத்துக்களை வலுவூட்டுவதற்காக ஏனைய இனவாத இயக்கங்களையும் துணைக்கு அழைத்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உண்மைக்குப் புறம்பான இந்த போலிப் பிரசாரம் இனவாதப் போக்குடையது. 

கடந்த காலங்களில் வடபுல முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களை இவர்கள் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும். புலிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் விரட்டியடிக்கப்பட்ட  முஸ்லிம்கள் சுமார் 25 வருடகாலம் தென்னிலங்கையில் அழுந்திவாழ்கின்றனர். இந்த அகதி முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினைகளை அறியாமல் இனவாதிகள் இவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொள்வது மனித நேயத்துக்கு முரணானது. 1990 ம் ஆண்டு வெளியேற்றப்பட்டு  தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களில் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி அகதிகள் தமது பூர்வீக கிராமங்களான கரடிக்குளி மறிச்சுக்கட்டி போன்றவற்றில் குடியேற முயற்சிக்கின்றனர்.

vil.jpg2_.jpg4_.jpg10

பல்லாண்டு காலம் இந்தப் பகுதியில் மக்கள் வாழாததனால் அந்தப் பிரதேசங்கள் நீண்டு வளர்ந்த காடுகளாக மாறிக்கிடக்கின்றன. தமது சொந்தக் காணியில் வளர்ந்துள்ள காடுகளை வெட்டி அதனைத்  துப்புரவாக்கி குடியேற முயற்சிக்கும் போதே இனவாதிகள் கூக்குரலிடுகின்றனர். அகதி முஸ்லிம்கள் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான உறுதி மற்றும் ஆவணங்கள் இருக்கின்றன. இவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக – சான்றாக பாழாகித் தூர்ந்து கிடக்கும் கிணறுகளும் உடைந்துபோன கட்டிடங்களுமே எஞ்சியிருக்கின்றன.

எனினும் இந்த இடைக் காலத்திலே அதாவது, 2012 ம் ஆண்டு  (24/10/2012) சுற்றாடல்வனத்துறை அமைச்சு இந்தப் பகுதி மாவட்ட செயலாளருக்கோ பிரதேச செயலாளருக்கோ எந்த விதமான அறிவித்தலையும் கொடுக்காது அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் தெரியாத வண்ணம் 6042 ஹெக்டயர் காட்டை (மக்களின் பூர்வீக நிலங்களை) வனவளப் பிரதேசமாக பிரகடனம் செய்தது. மறிச்சுக்கட்டி, கரடிக்குளி. போன்ற முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த அகதி முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளும் இந்த வனவள பிரதேசத்தில் உள்ளடக்கப்பட்டமை வேதனையானது.

யுத்தம் முடிந்த பிறகு, அகதி மக்கள் தமது காணிகளில் மீள்குடியேறச் சென்ற போது கிராமங்கள் காடாகி விட்டதைக் கண்டனர். தாங்கள் வாழ்ந்த பிரதேசம் இவ்வாறு கிடப்பதை கண்ட அகதி முஸ்லிம்கள் தமது மக்கள் பிரதிநிதி றிசாத் பதியுதீனிடம் முறையிட்டனர். மீள்குடியேற்றம் தொடர்பில் அப்போது அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலணிக் குழுவின் கவனத்துக்கு அமைச்சர் இதனை கொண்டுவந்தார். அதற்கமைய ஜானதிபதி செயலணிக் குழுவின் பரிந்துரையின்படி 100 ஏக்கர் காணியை  2013 – 01 – 15 ஆம் திகதி வன பரிபாலனத் திணைக்களம் விடுவித்தது. எனினும் அந்தக் காணியில் கூட இன்னும் மக்கள் குடியேறாமல் இருக்கும் நிலையே காணப்படுகின்றது.

 

ஆனால். விடுவிக்கப்பட்ட 100 ஏக்கர் காணி மட்டும் இவர்கள் வாழ்ந்த சொந்த பூமியல்ல, இன்னும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் இவர்கள் வாழ்ந்து தொழில் செய்ததே வரலாறு. அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இனவாத ஊடகங்கள் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை பிழையாக வழிநடத்துகின்றன. 

 

வில்பத்துக் காட்டில் அகதி மக்கள் மீள்குடியேறுவதாக இனவாதிகள்  புரளிகளை கிளப்பி வருகின்றனர். அவர்களது சொந்தக் காணிகளில் குடியேறச் சென்ற போது பொதுபலசேனா அவர்களை குடியேறவிடாமல் தடுத்தது. இன்று நிலைமை மேலும் மோசமாகி போதுபலசேனாவுடன் இணைந்து பல்வேறு இனவாத அமைப்புக்கள். இனவாத சூழலியலாளர்கள் ஆகியோரும் வடபுல முஸ்லிம்களுக்கெதிராக கூச்சலிட்டு வருகின்றனர். 

அந்த பிரதேச மக்கள் மீள்குடியேறச் சென்ற வேளை அவர்களின் மக்கள் பிரதிநிதியான அமைச்சர் றிசாத் பதியுதீன் உதவச் சென்றார் .தவிர அவர் முன்னின்று எந்த வனத்தையும் அழிக்கவுமில்லை, அளிக்க உதவவுமில்லை. அவ்வாறு நடைபெறவுமில்லை. வில்பத்துவிலோ அந்தப் பிரதேசத்திலோ அமைச்சருக்கு சொந்த நிலமும் இல்லை. அமைச்சரின் உயர்ச்சியிலும் எழுச்சியிலும் வளர்ச்சியிலும் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் அவரது செல்வாக்கை குறைப்பதற்காக வீண்பழி சாட்டுகின்றனர். அவர்களது குற்றச்சாட்டிலே எவ்விதமான உண்மையும் இல்லை.

rishad-bathiudeen_1

எனவேதான் அமைச்சர் றிசாத் அண்மையில் உரையாற்றும் போது வில்பத்துவில் ஓரங்குல நிலம்தானும் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதனை எவராவது நிரூபித்துக் காட்டட்டும்  எனப் பகிரங்க சவால் விடுத்தார். 

இந்த விவகாரம் தொடர்பில் சூழல் பாதுகாப்பு நிறுவனம் என்ற ஓர் அமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். அண்மையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது “மீள்குடியேற்றம் வில்பத்துவிலோ வில்பத்துவின் அண்மிய பிரதேசங்களிலோ இடம்பெறவில்லை” என சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வெளிவரலாம் என கூறப்படுகின்றது. 

மேலும் இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்தின் குரலாகவே கொள்ளவேண்டி இருக்கின்றது. “ யுத்த காலத்திலே வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களே மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி வருகின்றனர். அந்தக் குடியேற்றத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் தானும் தடுக்கவும் முடியாது மறிக்கவும் முடியாது. சொந்த மண்ணில் குடியேறுவது அவர்களது பிறப்புரிமை. வில்பத்து விவகாரம் இவ்வளவு பூதாகரமாக மாறியதற்கு றிசாத் பதியுதீன் ஒரு முஸ்லிமாக இருப்பதே காரணம் அதனாலேயே இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் இறுதியிலும் வில்பத்து மீள்குடியேற்றம் சட்ட விரோதமானது அல்ல என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் ராஜித ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்தினார். 

இனவாதிகளுக்கும் இனவாத சூழலியலாளர்களுக்கும் இனவாத அமைப்புகளுக்கும் இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

சுஐப் எம். காசிம்