ஸ்ரீ .சு. கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது !

இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  எனவே பகைமை அரசியலை கைவிடுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

Dilan-Perera-e1365731310744

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் உட்பட 9 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; 

பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின. 

இந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்நிலைக்கு காரணமாக அமைந்தது. எனவே இனி மேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம். 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நான் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவாலாக்கலை வழங்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு சமாதான தீர்ப்பு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். 

அதற்காக சமாதான பாத யாத்திரைகளில் கலந்து கொண்டேன். போராட்டங்களில் கலந்து கொண்டேன். இதனால் என்னை சிங்களப் புலி என்றார்கள். சிங்கள மக்களுக்கு எதிரானவன் என விமர்சித்தார்கள். 

சமாதானத்திற்காக நாம் நடத்திய கூட்ட மேடைகளில் அத்துமீறிப் புகுந்து பொதுபலசேனாவினர் எம் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மை பாதுகாக்க சுதந்திரக் கட்சியினரோ ஐக்கிய தேசிய கட்சியினரோ முன்வரவில்லை. 

இலங்கையில் வாழும் சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாதிகள் அல்ல. ஆனால் அரசியல்வாதிகள் தமக்குள்ள அதிகார ஆசையினால் இனவாதத்தை தூண்டுகின்றனர். அரசியல்வாதிகளே இனவாதிகள். 

இதன் காரணமாகவே பிரபாகரன் உருவானார். 

இனிமேல் இலங்கைக்கு ஒரு பிரபாகரன் வேண்டாம். 

சந்தர்ப்பவாத பகைமை அரசியலை ஒதுக்குவோம். 

இனவாத அரசியலை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். 

இன்று இணைந்த எதிர்க்கட்சி என சிலர் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. இனவாதம், மதவாதம் தூண்டும் விதத்திலான கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயக்காரவே ஆவார். இன்று இதனை எதிர்க்கின்றனர். 

தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அது சட்டவிரோதமல்ல என நான் இச் சபையில் வாதாடினேன். குரல் கொடுத்தேன். 

அன்று இதனை திகாமடுல்ல எம்.பி. யொருவர் எதிர்த்தார். என்னை சிங்களப் புலி என விமர்சித்தார். மக்கள் இன்று அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். 

இணக்கப்பாட்டு அரசின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு தமிழ், முஸ்லிம் எம்.பி. க்கள் அனைவரும் ஆதரவு வழங்கினர். 

சுதந்திரக் கட்சி, ஐ.தே. கட்சி இணைந்த இணக்கப்பாட்டு அரசு மீது நம்பிக்கை வைத்து எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களுடன் தேசிய பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முழுமையான ஆதரவை வழங்கினர். 

எனவே அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். 

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது. 

ஆனால் இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே இது இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை தவறவிடக்கூடாது. 

இனியும் தேசிய பிரச்சினையோடு கால்பந்து விளையாடாது அதற்கு நிலையான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். 

எனவே சந்தர்ப்பவாத அரசியலில் தூக்கியெறிவோம். 

உடனடியாக செயலில் இறங்குவோம். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்போம். 

மக்கள் இனியும் கார்ட்போர்ட் தேசிய வீரர்களுக்கு ஏமாற மாட்டார்கள். அவர்களை நிராகரிப்பார்கள். 

எனவே இன்றே ஒன்றுபடுவோம். செயல்படுவோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரத்தை பரவலாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே உறுதியாக இருக்கின்றேன். 

இனிமேல் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாதிகளுடனும் மதவாதிகளுடனும் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றது என்றார்.