ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வெற்றி கொண்டது !

212415.3

ஐ.பி.எல்., லீக் போட்டியில் ரகானே 91 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி பரிதாபமாக வீழ்ந்தது.  
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  
ரகானே அபாரம்: ராஜஸ்தான் அணிக்கு ரகானே, கேப்டன் ஷேன் வாட்சன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போது வாட்சன் (21) அவுட்டானார். பின் இணைந்த ரகானே, கருண் நாயர் ஜோடி, டில்லி அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபாரமாக ஆடிய ரகானே, கூல்டர்-நைல் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கருண் நாயர், குரிந்தர் சாந்து வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த போது கருண் நாயர் (61 ரன், 38 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார்.  
ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. ரகானே (91 ரன், 54 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி), ஜேம்ஸ் பால்க்னர் (8) அவுட்டாகாமல் இருந்தனர். 
டுமினி ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு மயங்க் அகர்வால் (11), ஸ்ரேயாஸ் ஐயர் (9) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. யுவராஜ் சிங் (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த மாத்யூஸ் (16), கேதர் ஜாதவ் (11) ஏமாற்றினர். ஸ்டூவர்ட் பின்னி, வாட்சன், பாட்யா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கேப்டன் டுமினி அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய டுமினி (56), பால்க்னர் பந்தில் அவுட்டானார்.  
டில்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சவுத்தீ துல்லியமாக பந்துவீச, 15 ரன்கள் மட்டும் கிடைத்தது. டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அமித் மிஸ்ரா (1), சவுரப் திவாரி (28) அவுட்டாகாமல் இருந்தனர். 
500  
நேற்று ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதிய போட்டி, ஐ.பி.எல்., அரங்கில் 500வது போட்டியாக அமைந்தது. இதில் 6 போட்டிகள் ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதின. இந்த 500வது போட்டியை கவுரவிக்கும் விதமாக, மைதானத்தில் இருந்த ‘மெகா ஸ்கிரீனில்’ கடந்த தொடர்களில் பட்டம் வென்ற அணிகள் மற்றும் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் அடங்கிய குறும்பட காண்பிக்கப்பட்டது.  
400  
பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் அணியின் ரகானே, இம்முறை 400 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், 10 போட்டியில் 4 அரைசதம் உட்பட 430 ரன்கள் எடுத்து, முன்னிலை வகிக்கிறார். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார். இவரை அடுத்து ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் (8 போட்டி, 378 ரன்) உள்ளார்.
212413.3