ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக லலித்மோடி நீடிக்க வாய்ப்பு!

 

69698cd0-63fa-47dc-af88-7e6a067a1371_S_secvpf

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தலைவராக இருந்த லலித் மோடி மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் அந்த பதவியில் இருந்து லலித்மோடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது. அன்னிய செலாவணி விதிமீறல் உள்பட பல்வேறு புகார்கள் குறித்து லலித் மோடி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருப்பதுடன் அவரை தேடி வருகிறது. 

லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் லலித்மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசியல் பிரமுகர்களின் மறைமுக ஆதரவுடன் லலித்மோடி தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதற்கிடையில் 2014-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் லலித்மோடி வெளிநாட்டில் இருந்த படியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்ட ஒருவரை மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகியாக தேர்வு செய்யக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த எச்சரிக்கையை ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்க மறுத்ததால் அதனை சஸ்பெண்டு செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. இடைக்கால கமிட்டி மூலம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் அமின் பதான் தலைமையில் 15 மாவட்ட சங்க நிர்வாகிகள், தலைவர் லலித் மோடி மற்றும் 3 நிர்வாகிகளுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பான வழக்கு ராஜஸ்தான் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. எதிர்பாராதவிதமாக லலித்மோடிக்கும், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த அமின் பதான் தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து லலித்மோடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக அமின் பதான் தரப்பினர் அதிகாரபூர்வமாக நேற்று கோர்ட்டில் தெரிவித்தனர். ராஜஸ்தான் கிரிக்கெட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை மேற்கொண்டதாக விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாகவே அமின் பதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது. 

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெற்று இருப்பதன் மூலம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு லலித்மோடி மீண்டும் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இறுதி முடிவை பொறுத்தே அவரது பதவியின் தலைவிதி நிர்ணயமாகும்.