தென் கொரியாவில் பிறந்து, கனடாவில் டொராண்டா நகரில் கிறிஸ்தவ பாதிரியாராக பணியாற்றியவர் ஹையான் சூ லிம் (வயது 60). இவர் சமூக நலப்பணிகள் செய்வதற்காக வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்குக்கு கடந்த ஜனவரி மாதம் வந்தார். வடகொரியாவில் எந்தவிதமான மத காரியங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிரியார் ஹையான் சூ லிம், வடகொரியாவில் கிம் ஜாங் அன் அரசை கவிழ்த்து விட்டு, அதை ஒரு மத நாடாக அறிவிக்க சதி செய்து, செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஹையான் சூ லிம் மீது வழக்கு தொடரப்பட்டது. கை விலங்கிடப்பட்ட நிலையில் அவர் கோர்ட்டுக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். இதில் 90 நிமிடம் விசாரணை நடந்தது. அப்போது பாதிரியார் தலை கவிழ்ந்து காணப்பட்டார்.
முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.