ரி – 20 உலகக்கிண்ணம் நெருங்கும்வேளை, குசலுக்கு விளையாட முடியாமல்போனால், அது அணியில் தாக்கத்தை செலுத்தும் !

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில்,

இதன் பின்னணியில் சூழ்ச்சியேதும் இருக்கலாம் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Kusal-Perera-640x400

 எனவே, குசல் ஜனித்தின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டிமாவட்ட எம்.பியான லக்கி ஜனவர்தன, இலங்கை அணி வீரரான குசல் ஊக்கமருந்து பாவனை குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவர் விடயத்தில் அரசு எடுத்துள்ள நடடிவடிக்கை என்னவென எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விளையாட்டுதறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“நியூசிலாந்தில் நடைபெற்ற பரிசோதனையின் பிரகாரமே அவருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தற்காலிகமாக போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நாம் கலந்துரையாடி வருகின்றோம். சட்டத்தரணிகள் குழுவொன்றும் இருக்கின்றது. குசலின் மாதிரிகள் பெறப்பட்டு அவை விசாரணைக்காக வெளிநாட்டுக்காக அனுப்பப்படும்.

ரி – 20 உலகக்கிண்ணம் நெருங்கும்வேளை, குசலுக்கு விளையாட முடியாமல்போனால், அது அணியில் தாக்கத்தை செலுத்தும். எனவே, இதன் பின்னணியில் சூழ்ச்சியிருக்கிறா என்றும் பார்க்கவேண்டும்.

ஜனாதிபதியும் குசலுடன் பேசினார்.  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் குசலுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும். அவர் தவறிழைத்திருந்தால் வேறுவழியில்லை” – என்றார்.