அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகள் மிரட்டலால் நேற்று அதிரடியாக மூடப்பட்ட நிலையில், அது போலியான மிரட்டல் என்று தெரிய வந்ததையடுத்து, இன்று மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பல பள்ளிகளுக்கு நேற்று தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு பரவலாக தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் இ-மெயில் வந்தது. தீவிரவாதிகள் மின்னணு அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக நகர அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். இதனால் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 6 லட்சத்து 43 ஆயிரம் மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அது போலியான மிரட்டல் என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அனைத்து பள்ளிகளையும் இன்று மீண்டும் திறக்க லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதே போல், நியூயார்க் நகரத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல் வந்தபோது, அதிகாரிகள் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.