மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானாவிற்கு பிரதியமைச்சர் அமீர் அலி பதில்

 

ameer ali

பி.எம்.எம்.ஏ.காதர்

மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மோசடியாக பறித்து எனக்கு தந்துவிட்டதாக மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் ஊடகச் செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைக்கு தனது பெயர் முன்மொழியப்பட்டதாகவும் அதனை மோசடியாக பறித்துக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.                                முதலில் மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுத் தலைமைப் பதவி கடந்த காலங்களில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது  என்ற வரலாறு தெரியாமல் இவ்வாறான ஒரு கருத்தை இவர் கூறியிருப்பது ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியின் அரசியல் முதிர்ச்சியற்ற  சிறுபிள்ளைத்தனமான கூற்றாகவே கருதமுடியும்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெயர் மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைப் பதவிக்கு யாரால் முன்மொழியப்பட்டது? ஐக்கிய தேசியக்கட்சியாலா? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாலா? அல்லது பொதுஜன ஐக்கிய முன்னணியாலா? அல்லது வேறு ஏதாவது கட்சியினாலா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.                                                                                     மாவட்டக் குழுத் தலைவர் பதவி என்பது அரசில் பதவி வகிக்காதவர்களுக்குத்தான் வழங்கப்படவேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும்.

இன்று எமது நாட்டில் பல அமைச்சர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பதவி வழி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைமையாக மூன்று மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துபவர். போதாக்குறைக்கு அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கவேண்டி ஆசைப்படுவது ஒரு நியாயமான அரசியல் போக்காகக் கருதமுடியாது. மாறாக இது பதவி ஆசைக்கான செயற்பாடாகவே கொள்ளமுடியும்.                            கடந்த காலங்களில் இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் எமது கட்சி சிறுபான்மையினரின் நலன் கருதி தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டது.

அந்தவகையில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை எமக்குத் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிமிடம் ஐக்கிய தேசியக் கட்சிக்காரராகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் நடிப்பது எனக்குத் தெரியாது. ஆனால் எமது கட்சி எதனையும் நேரடியாகவும் தூரநோக்குடனும் தெளிவாகப் பேசக்கூடியது.

நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அவரின் வெற்றிக்காகப் பாடுபட்டபோது ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் அவருக்கு எதிரான அணியில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்தது. சமூகத்தின் நலன் கருதி மைத்திரிபால சிறிசேன அவர்களோடு நாமே முதலில் இணைந்தோம் என்பதனையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் என்றவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகின்ற உரிமை எனக்கு இல்லை என்றா! நீங்கள் கருதுகின்றீர்கள்? உங்களது இந்த ஊடக அறிக்கையானது உங்களது பதவி மோகத்தின் வெளிப்பாடாகவே கருதமுடிகின்றது.

உங்களுக்கு வழங்கப்படவிருந்த மட்டு மாவட்ட அபிவிருத்திக்கு குழுத் தலைமைப் பதவியை நான் தட்டிப் பறித்துக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் விளையாட்டுப் பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டீர்களா? அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட இவர்களிடமிருந்து தட்டிப் பறிப்பது என்பது சாத்தியமா? அவர்களுக்குத் தெரியும் யார், எந்தக் கட்சி, எவ்விதத்தில் தமக்குத் துணையாக நின்றன என்ற நிலைப்பாடு.

நீங்கள் எனது நல்ல நண்பர். உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராக நான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நீங்கள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டு இப்படி இட்டுக்கட்டப்பட்ட செய்தியினை சோடித்து ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

அடிக்கடி பாராளுமன்றத்தில் சிரித்துப் பேசிப் பழகும் நீங்கள் ஒரு தடவையேனும் இதுபற்றி என்னிடம் வினவியதில்லை. மாறாக மேலதிகமான துணைத் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாகவும் அதற்கு என்னை எதிர்ப்பு எதனையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் நீங்கள் கேட்டுக்கொண்டுவிட்டு இப்போது புறமுதுகில் குத்துவதுபோல இவ்வாறான ஒரு ஊடக அறிக்கையை வழங்கியிருப்பதானது வருந்தத்தக்க விடயமாகும்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இன்னொரு இணைத்தலைவராக தமிழரசுக் கட்சியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. சிறிநேசன் என்பவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். அவர் தெரிவுசெய்யப்பட்டிருப்பது நியாயமும்கூட. அதனை நாம் வரவேற்க வேண்டும். மாறாக உங்கள் கட்சிசார்ந்த இருவரும் என்னோடு சேர்த்து மூவருமாக மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத் தலைமையாக செயற்படுவது எந்தவிதத்தில் நியாயம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்தப் பதவி ஆசையிலிருந்து நீங்கள் வெளிவந்து எதிர்காலத்தில் எல்லாவிதமான வைராக்கியங்களையும் புறந்தள்ளி எம்மோடு ஒற்றுமையாக எமது மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.