இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு தற்காலிக விளையாட்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கூறினார்.
குசல் ஜனித் பெரேராவின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை வெளிநாட்டு பரிசோதனை கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக தமது விளையாட்டு வீரர் குற்றம் இழைத்தவரா என்பதனை தம்மால் உறுதிச் செய்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக, குசல் ஜனித் பெரேராவிற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.