சகோதரர்கள் இருவரும் ஒவ்வொருவரினது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மாறிமாறி விமர்சனம் !

 அண்ணன் – தம்பியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவும் நேற்றுச் சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
mahinthantha altho

இதன் போது இருவரும் ஒவ்வொருவரினது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்ததால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. இதையடுத்து கடுந்தொனியில் எச்சரித்து சபையைக் கட்டுப்படுத்தினார் பிரதி சபாநாயகர். 

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் ஐ.ம.சு.முன்னணியின் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. உரையாற்றிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 

விவாதத்தில் உரையாற்றிய மஹிந்தானந்த எம்.பி., 

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தோல்வியான வரவு – செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அரசின் கொள்கைப் பிரகடனம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சபையில் உரையொன்றை நிகழ்த்தினார். 

இதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசின் இடைக்கால பொருளாதாரக் கொள்கையொன்றை வெளியிட்டார். இதன் பின்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வரவுசெலவுத் திட்ட உரையைச் சமர்ப்பித்தார். நிதி அமைச்சர் மீது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நம்பிக்கையில்லை. இதனால்தான் அவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்றார். 

பின்னர் அரசையும், சபையிலிருந்த ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சிலøரயும் வசை பாடியவாறு கருத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதன்போது கொதித்தெழுந்த அவரது சகோதரரான ஆனந்த அளுத்கமகே, மஹிந்தானந்தவுக்கு எதிராக கூச்சலிட்டவாறு இருந்தார். இதனையடுத்து, மஹிந்த ஆதரவு தரப்பிலிருந்த எம்.பிக்கள் மஹிந்தானந்த எம்.பிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இருவரும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர் சித்துக் கொண்டனர். இதன்போது சபைக்குத் தலைமைதாங்கிய எட்வர்ட் குணசேகர எம்.பி., இந்தக் கூச்சல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர பல தடவைகள் முயற்சித்தபோதும், அது பலனளிக்கவில்லை. கூச்சலும் குழப்பமும் தொடர்ந்தவாறே இருந்தன. இதையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபா பீடத்திற்குத் தலைமையேற்றார். 

இவர் தலைமையேற்ற போதும் இரு தரப்பிலும் கூச்சலும், குழப்பமும் ஓயவில்லை. ஆனந்த அளுத்கமகே எம்.பி. தொடர்ந்தும் கூச்சலிட, கூச்சலிடுவதை நிறுத்தி விட்டு அமைதியாக ஆசனத்தில் அமருங்கள். இல்லாவிட்டால் உங்களை சபையிலிருந்து வெளியேற்றவேண்டியேற்படும்” என்று பிரதி சபாநாயகர் கடுந்தொனியில் உத்தரவிட அமைதியாக ஆசனத்தில் அமர்ந்தார் ஆனந்த அளுத்கமகே எம்.பி. 

இதனையடுத்து தனது சகோதரனை மறைமுகமாக விமர்சித்தவாறு உரையைத் தொடர்ந்தார் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி.