இலங்கையில் முதற் தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 6 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக இம்முறை நியமனம் பெற்றுள்ளனர்.
யாழ் மாவட்டம் – மாவை சேனாதிராஜா
வவுனியா மாவட்டம் – செல்வம் அடைக்கலநாதன்
கிளிநொச்சி மாவட்டம் – எஸ்.சிறீதரன்
மன்னார் மாவட்டம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டம் – டாக்டர் எஸ். சிவமோகன்
மட்டக்களப்பு மாவட்டம் – ஜி.சிறீநேசன்
திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களிலும் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணைத் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பாரப்பு தம்மிடம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது பற்றி பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன.
புதிய அரசாங்கத்தினாலும் ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சில நாட்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த இணைத் தலைவர் பதவிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை காரணமாகவே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.