ஐ.பி.எல் 2016: தோனியை ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி!

 

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது.

இந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக அடுத்த 2 ஆண்டுக்கு புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

புனே அணியை கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கோயங் காவின் நியூரைசிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை இன்டெக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.

images

புனே, ராஜ்கோட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடந்தது. சென்னை, ராஜஸ்தான் ஆகிய 2 அணிகளில் உள்ள மொத்தம் 50 வீரர்கள் இந்த தேர்வில் இடம் பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இரு அணியிலும் உள்ள ‘டாப் 5’ வீரர்கள் புனே, ராஜ்கோட் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான தொகை முறையே ரூ.12½கோடி, ரூ.9½ கோடி, ரூ.7½ கோடி, ரூ. 5½ கோடி, ரூ. 4 கோடி என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

புனே, ராஜ்கோட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு மதியம் 12 மணியளவில் தொடங்கியது. முதல் வீரரை தேர்வு செய்யும் முன்னுரிமையை புனே அணி பெற்று இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 ஆண்டுகளாக கேப்டனாக விளையாடிய டோனியை புனே அணி முதல் வீரராக தேர்வு செய்தது. அவருக்கான வரைவு தொகை ரூ. 12½ கோடியாகும்.

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து கடந்த ஐ.பி.எல். வரை டோனி சென்னை அணிக்காக விளையாடினார். அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் டோனி புனே அணியில் விளையாடுகிறார். மஞ்சள் உடையில் களம் வந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் வேறு உடையில் விளையாடுவார்.

ராஜ்கோட் அணி முதலாவது வீரராக ரெய்னாவை தேர்வு செய்தது. அவருக்கான தொகை ரூ.12½ கோடியாகும்.

டோனியை போலவே ரெய்னாவும் கடந்த 8 ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்தனர். அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ராஜ்கோட் அணியில் விளையாடுவார்.

புனே அணி 2–வது வீரராக ரகானேயை தேர்வு செய்தது. அவருக்கான ஊதியம் ரூ.9½ கோடியாகும். ரகானே கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார்.

அவர் 2008 முதல் 2010 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காவும், 2011 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காவும் ஆடினார். அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ரகானே புனே அணியில் ஆடுகிறார்.

ராஜ்கோட் அணி 2–வது வீரராக ரவீந்தர ஜடேஜாவை தேர்வு செய்தது. அவருக்கான தொகை ரூ. 9½கோடியாகும்.

புனே அணியில் 3–வது வீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான ஊதியம் ரூ. 7½ கோடியாகும்.

அவர் இதுவரை சென்னை அணியில் மட்டுமே விளையாடி இருந்தார். இனி புனே அணியில் ஆடுவார்.

இதே போல் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) டுபெலிசிஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய வீரர்களும் புனே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நியூசிலாந்து கேப்டன் மேக்குல்லம் 3–வது வீரராக ராஜ்காட் அணிக்கு தேர்வானார். அவருக்கான தொகை ரூ. 7½ கோடியாகும்.

இதே போல பவுல்க்னெர் (ஆஸ்திரேலியா) பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரும் ராஜ்கோட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 10 வீரர்களை தவிர்த்து மீதியுள்ள 40 வீரர்கள் பிப்ரவரி 6–ந் தேதி பெங்களூரில் நடைபெறும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.