அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சான் பெர்னார்டினோ நகரில் உள்ள ரீஜினல் சென்டரில், பாகிஸ்தான் வம்சாவளி வாலிபர் சயீத் ரிஸ்வான் பாரூக் மற்றும் அவரது மனைவி (பாகிஸ்தானை சேர்ந்தவர்) தஸ்பின் மாலிக் ஆகியோர் கடந்த 2-ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் பின்னர் சுட்டுக்கொன்றனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் என கருதப்படும் அந்த தம்பதி குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று, சான் பெர்னார்டினோ நகருக்கு அருகே உள்ள ஒரு ஏரிக்கு அருகில் இந்த தம்பதியை சிலர் பார்த்தாக தகவல் கிடைத்தது. எனவே தங்களைப்பற்றிய ஆவணங்களை அந்த ஏரிக்குள் அவர்கள் வீசியிருக்கலாம் என கருதிய புலனாய்வுத்துறையினர், ஏரிக்குள் தேட முடிவு செய்தனர்.
அதன்படி புலனாய்வுத்துறையை சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடந்த 10-ந்தேதி முதல் ஏரிக்குள் இறங்கி தேடி வந்தனர். இந்த தேடும்பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் சில பொருட்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அது குறித்து மேலும் தகவல்களை வெளியிட மறுத்தனர்.