இந்த நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது :ஜனாதிபதி மைத்திரிபால !

ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியான நான் பயன்படுத்துவதை விட அதிகமான வாகனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிகை தொடர்பான அறிக்கையொன்றை நிதி அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறார். 

ஜனாதிபதி இந்த கூட்டத்தில் தொடர்ந்து குறிப்பிடுகையில்:-

இந்த நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. இவை நிறுத்தப்படவேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாசிக்குடாவுக்கு சென்றிருந்த போது அதிகளவான இராணுவத்தினரும் கடற்படையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

மஹிந்த ராஜபக்ச தற்போது 240 பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்துகிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது பதவிக்காலம் முடிவடைந்ததும் நான் உத்தியோகப்பூர்வ பங்களாக்களைத் தேடிக்கொண்டிருக்க மாட்டேன். நான் பொலன்னறுவைக்கு சென்றுவிடுவேன். அங்குள்ள எனது வீட்டில் வாழ்வேன். 

ஆனால் மஹிந்த ராஜபக்ச நான் பயன்படுத்துவதை விட அதிகமான வாகனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.