எரிபொருள் இறக்குமதி விநியோகமானது கள்ளுக்கடை வியாபாரமல்ல : அனுரகுமார !

எரிபொருள் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கை மக்களுக்கு அதற்கான நிவாரணத்தை இந்த அரசாங்கம் ஏன் இதுவரை பெற்றுத்தரவில்லையென அனுரகுமார திஸாநாயக்க எம். பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

anura kumara

விலையைக் குறைப்பது மாத்திரம் அரசாங்கத்தின் வீரத்தனமாகாது என்று சுட்டிக்காட்டிய திஸாநாயக்க, இதனை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு அறவிடப்படும் இடைத்தரகு கூலியினை அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வரவு- செலவுத் திட்டத்தில் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் பெற்றோலிய வளத்துறையமைச்சுக்களின் நிதியொதுக்கீடு தொடர்பில் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகள்அரசாங்கத்தினால் மீளப்பெற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் இறக்குமதி விநியோகத்திற்கு மேலதிகமாக அரசியல் மற்றும் விளம்பரப்படுத்தலுக்காக அநாவசியமாக செலவு செய்ததன் மூலம் அதிகூடிய 300 பில்லியன் ரூபா கடனை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுரகுமார திஸாநாயக்க எம். பி. மேலும் கூறியதாவது:-

ஆங்கிலேயர் காலத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெட்ரிக்தொன் எண்ணெயினை கொள்ளக்கூடிய 100 தாங்கிகள் திருகோணமலையில் அமைக்கப்பட்டன. இவை இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டன. தற்போது இதில் 17 மாத்திரமே ஐ. ஓ. சி. (இந்திய எண்ணெய்க் கம்பனி) யினால் இயக்கப்படுகிறது. ஏனைய 83 தாங்கிகளும் மூடிக்கிடக்கின்றன. இவை வீணாக சேதமடையும் நிலை உருவாகும். எனவே அரசாங்கம் இவற்றை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஐ. ஓ. சி. மாதாந்தம் 20 மில்லியன் லீற்றர் எரிபொருளை விற்பனை செய்கிறது. லீற்றருக்கு 16 ரூபா வீதம் இந்நிறுவனம் மாதாந்தம் 320 மில்லியன் ரூபாவினை இலாபமாகப் உழைக்கிறது. எண்ணெய் தாங்கி, நிலம், முகாமைத்துவம் அனைத்தும் இலங்கைக்கு சொந்தமாகவுள்ள போது எதற்காக இலாபத்தை இந்திய கம்பனிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

இதன் ஒரு பகுதியையேனும் அரசாங்கம் வரியாக அறிவிட்டு இலாபம் உழைத்திருக்கலாம். தனியார் மயப்படுத்தலினால் ஏற்பட்ட விளைவே இதுவாகும்.

எரிபொருள் இறக்குமதி விநியோகமானது கள்ளுக்கடை வியாபாரமல்ல. இதில் எதற்காக அரசாங்கம் தரகு கூலி அறவிட வேண்டும். இதனால் மக்கள் முழுமையாக பயனடைய முடியாதுள்ளது. துறைமுகத்தை வந்தடையும் போது ஒரு லீற்றர் பெற்றோல் 59 ரூபா 39 சதம், டீசல் 51 ரூபா மசகு எண்ணெய் 71 ரூபாவாகும். ஆனால் அவை அந்தந்த விலைகளில் விற்கப்படுவதில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் வேலை செய்பவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உயர்பதவி வகித்தவர் ஆகியோருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்தே சம்பளம் பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு செலவான 250 மில்லியன் அமெரிக்கா டொலர்களில் 216 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையே அங்கீகரித்துள்ளது.

சந்தையில் போமடமித் தன்மை இல்லாத நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நரிமலை (பொக்ஃஸ் ஹில்) மோட்டார் சைக்கிள் போட்டிக்காக 50 இலட்சம் ரூபாவும் கஜபா மோட்டார் சைக்கிள் போட்டிக்காக 50 இலட்சம் ரூபாவும் விளம்பரமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல விகாரைகளின் செயற்பாடுகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.