பூமியை காப்பாற்ற பாரிஸ் ஒப்பந்தம் மிகச் சிறந்த வாய்ப்பாகும்: ஒபாமா நம்பிக்கை!

 
நமக்கென இருக்கும் ஒரே கிரகமான பூமியை காப்பாற்ற பாரிஸ் ஒப்பந்தம் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

obama

பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருவது தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால், இதில் ஆக்கப்பூர்வமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக கடந்த இரு வாரங்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாநாடு நடத்தப்பட்டு வந்தது. 

196 நாடுகளுடன் நடந்துவந்த பலசுற்று பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து உடன்பாடு ஒன்றினை பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ட் பாபியஸ், பலத்த கரவொலிக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்தார்.

அந்த உடன்பாட்டில், உலக வெப்பமயமாதலை வளர்ந்து வரும் நாடுகள் சமாளிக்க 2020-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடி) நிதி திரட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழாக குறைக்க வேண்டும் என இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த உடன்படிக்கை உருவானதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரின் வெள்ளை மாளிகையில் இருந்து மக்களிடையே உரையாற்றிய ஒபாமா கூறியதாவது:-

நமக்கென இருக்கும் ஒரே கிரகமான பூமியை காப்பாற்ற மிகச் சிறந்த வாய்ப்பாக பாரிஸ் ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்த தருணம் உலகின் திருப்புமுனையாக அமையும் என நான் நம்புகிறேன். இந்த பருவநிலை ஒப்பந்தத்தின் விளைவாக பூமி நல்லநிலையில் இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள முதல்கட்ட இலக்குகள் எட்டப்படுமேயானால் புவியில் இருந்து கரியமலத்தை குறைப்பதில் நாமும் ஒரு பகுதியாக இருப்போம். தூய்மையான மின்னாற்றலின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகளை நமது தலைமுறையை சேர்ந்தவர்கள் காண முடியும். நமது முயற்சியின் முழுப்பலன்களையும் காண்பதற்கு நாம் உயிருடன் இருக்கப் போவதில்லை.

ஆனால், அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு தகுந்தவாறு இந்த பூமி நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதில்தான் எனது அக்கறை உள்ளது. எனது பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஒருநாள் பூங்காவுக்கு செல்ல வேண்டும். அவர்களின் சிரிப்பொலியை கேட்டு மகிழ்ந்தபடி, அவர்களுடன் கைகோர்த்தவாறு அமைதியான சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க வேண்டும். 

அப்போது, அந்த நிம்மதிக்காக நாம் இன்று உழைத்த உழைப்பு எதிர்வரும் தலைமுறையினருக்கு மாற்று எதிர்காலத்தை உருவாக்கித் தந்துள்ளது. அவர்களுக்கு தேவையான தூய்மையான காற்று, தூய்மையான குடிநீர், நிலைத்த தன்மையுடன் கூடிய அழகிய பூமியை அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி நமது மனங்களில் நிறைந்திருக்கும். அதைவிட முக்கியமானது, வேறென்ன இருக்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தம் ஒப்பந்தம் உருவாக முக்கிய தூண்டுகோலாக இருந்து பலநாட்டு தலைவர்களுடன் அடிக்கடி இதுதொடர்பாக ஆலோசனை நடத்திவந்த ஒபாமா, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாரிஸ் ஒப்பந்தம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.