சீன நிறுவனம் இணக்கம் தெரிவித்தால் போட் சிட்டி திட்டத்திற்கு அனுமதி அளிக்க அரசாங்கம் தயார்!

 

சர்ச்சைக்குரிய போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகர வேலைத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு, சீன நிறுவனம் இணக்கம் தெரிவிக்குமாயின், நாளை கூட அதற்கான அனுமதியை அளிக்க அரசாங்கம் தயார் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

ravi-karunanayake

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் போட் சிட்டி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது சுற்றுச் சூழல் தொடர்பான அறிக்கை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் குறித்த சீன நிறுவனத்துடன் பிரதமர் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்க, இதன்போது 99 வருட குத்தகை அடிப்படையில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதன்படி இந்த ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்படுமாயின் நாளையேனும் கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க, இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் இது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.