ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று முன்தின இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த ராணுவ முகாம்களில் இருந்து ஏராளமான ராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
நேற்று பிற்பகல் ஆப்கான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் படுகாயம் அடைந்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கந்தஹார் விமான நிலையத்தை 27 மணிநேரம் முற்றுகையிட்டு தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள், 2 போலீசார் மற்றும் 38 பொதுமக்கள் என 50 பேர் பலியாகி உள்ளனர். அதனுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.