ஐ.ம.சு.முவை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் நிமல்.சிறிபால டி சில்வாவுக்கும், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் பாராளுமன்றத்தில் நேற்று கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற குழறுபடிகள் மற்றும் மோசடிகள் குறித்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் வகையில் இருவரும் கருத்துக்களை வெளியிட்டனர்.
போக்குவரத்து அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தான் அமைச்சராகவிருந்தபோது போக்குவரத்து சபையை முன்னேற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன் பின்னர் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகத்தான் போக்குவரத்து சபை பாரிய சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாகவும், கடந்த அரசாங்கமும், போக்குவரத்து அமைச்சரும் யதார்த்தபூர்வமான முறையில் நடந்துகொண்டிருக்கவில்லையென்றும் கூறினார்.
போக்குவரத்து சபைக்கு 2200 பஸ்களை லீசிங் முறையில் கொள்வனவு செய்து பஸ்களால் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு லீசிங் கட்டணத்தைச் செலுத்தியதாக குமார வெல்கம கூறியிருந்தார். எனினும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்களால் ஈட்டப்படும் வருமானம் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்கப் போதுமானதாக இல்லை. இவ்வாறான நிலையில் லீசிங் செலுத்தியதாக யதார்த்தமற்ற கருத்தை குமார வெல்கம கூறுவதாக அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா சுட்டிக்காட்டினார். இதன்போது குமார வெல்கம குறுக்கிட்டார். எனினும், தனது உரையை குழப்ப வேண்டாம் எனக் கூறிய சிறிபலா.டி.சில்வா, ‘உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும். எமக்கு ஒன்றும் தெரியாது’ என்பதுபோல கதைக்க வேண்டாம் எனக் கூறினார். இருவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தால் சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.