ஜனநாயகக் கட்சி அலுவலகத்தைக் கட்டியெழுப்ப நிதியளிக்குமாறு எவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதியிடம் கோரியதாகவும், எனினும் அவரிடம் இலஞ்சம் பெறவில்லை எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சேனாதிபதி பாரிய பணத்தை செலவழித்து எவன்காட் நிறுவன ஊழியர்களை அண்மையில் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அழைத்து வந்தது தான் இலஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டியதாகவும், தான் யாருடமும் இலஞ்சம் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொன்சேகா இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் தனது அலுவலகத்தில் பணி புரிந்த கபில ரத்நாயக்க என்பவர் சேனாதிபதியிடம் இலஞ்சம் பெற்றாரா என்பது தனக்கு தெரியாது எனவும், அவர் ஊழல்வாதி என்பதாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் எவன்காட் நிறுவனத்தில் பணி புரியவில்லையாயின் அதனை நிரூபித்துக் காட்டுமாறும் பொன்சேகா இதன்போது சோனாதிபதியிடம் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன் எவன்காட் தலைவர் சிறிய தொகையை இலஞ்சமாக வழங்குவது இல்லை மில்லியன் 500, 600 என வழங்குபவர் எனவும் அவருடன் தொடர்பைப் பேணிய விஜயதாஸ ராஜபக்ஷ தனது சவாலுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சேனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் டிஸ்னி லேன்ட்டுக்கு சுற்றுலா சென்றதாகவும் அங்கு தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் வழங்கியது சேனாதிபதியே எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சேனாதிபதிக்கு இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை வௌியிட வேண்டும் எனவும் இல்லையாயின் தான் விஜயதாஸ தொடர்பில் மேலும் தகவல்களை வௌியிடத் தயாராக உள்ளதாகவும் பொன்சேகா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.