எஸ்.அஷ்ரப்கான்
அமைச்சர் றிஷாட் பதியுதீன் விரைவில் நடைபெற இருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு மீள் குடியேற்ற அமைச்சை கேட்டுப் பெற வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்துள்ளார்.
வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் குறிப்பிடும்போது,
அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் ‘அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வடபுல மக்களின் மீள் குடியேற்றம் முழுமையடையாவிட்டால் தனது அமைச்சுப் பதவியை துக்கி வீசுவேன்,’ என்று அன்மையில் பாராளுமன்றத்தில் பேசியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு, தான் வட புல மக்களின் மீள் குடியேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்டவர் போல ஒரு தோற்றப்பாட்டை கொடுக்க முனைகின்றது. ஆனால் அமைச்சரின் இவ்வாறான ஆக்ரோசமான பேச்சுக்களும், அறிக்கைகளும் இதுதான் முதல் தடவையல்ல.
வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக மைத்திரி மற்றும் றணில் ஆகியோருடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை செய்யாமல் விட்டது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இம்மக்களின் மீள் குடியேற்றமும் அரசாங்கத்தின் முன்னிலை வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் தமக்கு கிடைக்க இருக்கின்ற அமைச்சுப்பதவி தொடர்பாகவும் ஏனைய பதவிகள் தொடர்பாகவும் மாத்திரமே ஒப்பந்தத்தைச் செய்திருந்தார். அதாவது சிறுபான்மை அரசியல் கட்சிகள் பெரிய கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்கின்றபொழுது சில நேரங்களில் இரண்டு வகையான ஒப்பந்தங்கள் செய்வார்கள். ஒன்று தான் சார்ந்துள்ள சமூகங்கள் தொடர்பாக பிரச்சினைகளை முன் நிபந்தனையாக வைத்து செய்கின்ற ஒப்பந்தம் சில நேரங்களில் மேலதிகமாகச் செய்கின்ற இன்னுமொரு ஒப்பந்தம்தான் தனக்கோ தனது கட்சிக்கோ எதிர்பார்க்கப்படுகின்ற சலுகைகள் தொடர்பான ஒப்பந்தம், அதில் பிரதானமாக தனக்குரிய அமைச்சுப் பதவி ஏனையவர்களுக்கான ஏனைய சலுகைகள் போன்ற விடயமுமாகும்.
நமது நாட்டின் அரசியல் பரிபாசையில் முன்னைய சமூகம் தொடர்பான ஒப்பந்தத்தை ‘ஒப்பந்தம்’ என்றும் சலுகைகள் தொடர்பான ஒப்பந்தத்தை ‘சொப்பிங் லிஸ்ட்’ என்றும் அழைக்கப்படும். ஆனால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் (சமூகம் சம்மந்தமாக) ‘ ஒப்பந்தம் ‘ எதுவும் செய்யவில்லை. மாறாக ‘ சொப்பிங் லிஸ்ட் ‘ மாத்திரம்தான் செய்தார். இது வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அவரது அக்கறையின்மைக்கான எடுத்துக்காட்டாகும். (அவ்வாறு ஏதாவது ஒப்பந்தம் செய்திருந்தால் மக்களுக்கு காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.) வட புல முஸ்லிம்களுக்காக ஆக்ரோசப்படுவதுபோல் காட்டுகின்ற அமைச்சர் ஆகக் குறைந்தது இந்த ‘சொப்பிங் லிஸ்டிலாவது’ தமக்கு மீள்குடியேற்ற அமைச்சுப்பதவி தரவேண்டுமென்று ஏன் கேட்கவில்லை. இன்று முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக மீள் குடியேற்ற அமைச்சிற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கூட செய்யப்படவில்லை என்று இப்பொழுது குறை கூறுகின்றார். மறுபுறத்தில் இந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமை தொடர்பாகவும், இந்த ஆளுமையை முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு எதிராக அவர்கள் பாவிப்பதாகவும் அவர் அடிக்கடி குறிப்பிடுகின்றார். இங்கு அவர் புரிந்து கொள்ள வேண்டும், த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக மைத்திரியுடனும், றணிலுடனும் ஒப்பந்தம் தான் செய்தார்களே தவிர சொப்பிங் லிஸ்ட்டைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதுதான் அவர்களது ஆளுமையின் இரகசியம். அதனால்தான் அவர்கள் தான் சார்ந்த சமூகத்திற்காக தற்போது சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேநேரம் இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து அமைச்சரவையில் பாரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் சில புதியவர்களை உள்வாங்குகின்ற அதேவேளை பல அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கள் தொடர்பாக அதிருப்தியில் இருப்பதனால் ஆகும்; என்று கூறப்படுகிறது.
எனவே இந்தக் கட்டத்திலாவது ஏன் அவர் தனக்கு மீள் குடியேற்ற அமைச்சை புதிய அமைச்சரவை மாற்றத்தில் தரவேடுமென்று கேட்கக் கூடாது அல்லது போராடக் கூடாது. இன்று அவரிடம் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எனவே இந்த 5 பாராளுமன்ற உறுப்பினர் பலத்தை ஒரு சமூகத் தேவைக்காக போராட பயன்படுத்தாவிட்டால், தேர்தல் காலங்களில் ‘எங்களுக்கு ஆசனங்களைத் தாருங்கள் சமூகத்திற்காக போராடுவதற்காக அல்லது உழைப்பதற்காக’ என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது ? எனவே முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உடனடியாக அவர்கள் குடியமர்த்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டியது அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தார்மீக கடமை ஒன்றாகும்.
இதைவிடுத்து 2 வருடங்களுக்குள் மீள் குடியேற்றம் நிறைவு செய்யப்படாவிட்டால் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்று சவால் விட்டு மக்களைத் திசை திருப்பவோ அல்லது ஏமாற்றவோ அவர் முற்படக் கூடாது. அவர் இவ்வாறான சவால்களை விடுவது இதுதான் முதல் தடவையல்ல. அதேநேரம் அவர் விடுத்த சவால்களையோ அல்லது கொடுத்த வாக்குறுதிகளையோ நிறைவேற்றிய வரலாறும் இல்லை.
வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது கட்சிக்கு கிடைக்காவிட்டால் தமது கட்சி மாகாண சபையில் தனிக் கட்சியாக இயங்கும் என்று சூழுரைத்தார். செய்தாரா ? தமது கட்சிக்கு மு.கா. வை விட ஒரு ஆசனமேனும் குறைவாகக் கிடைத்தால் தலைமைப்பதவியை இராஜினாமாச் செய்வேன், என்று சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் சூழுரைத்தார். செய்தாரா ?
கட்சியில் இருக்கின்ற அடுத்தவரையும் விலக்கிவிட்டு தன் தலைமைத்துவத்தை எவ்வாறு பலப்படுத்திக் கொள்வது என்றுதான் முயற்சிக்கின்றார்.
தொலைக்காட்சியிலும், தேர்தல் மேடைகளிலும் குறித்த சிலருக்கு தேசியப்பட்டியல் தருவேன் என்று அறுதியிட்டுக் கூறினார். செய்தாரா ?
இரண்டாவது தேசியப்பட்டியல் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, அவ்வாறு அவர்கள் தராவிட்டால் அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்று எனக்குத் தெரியும் என்று ‘அசகாய சூரன்’ போல் சூளுரைத்தார். செய்தாரா ?
எனவே இந்த வரிசையில் இப்பொழுது புதிய சவால் அடுத்த 2 வருடத்திற்குள் மீள் குடியேற்றம் நிறைவேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்பதாகும். ஆனால் இரண்டு வருட முடிவிலும் மீள் குடியேற்றம் நிறைவு பெறாவிட்டால் அதற்கும் ஏதாவது புதிய கதையை கூறுவார். தான் வாக்கு மீறுபவர் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒருவர் மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளையோ சாவல்களையோ விடுப்பதில் பயனில்லை. உள்ளுராட்சித் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல சவால்களும் வாக்குறுதிகளும் அமைச்சரிடத்திலிருந்து கொட்டும் என்பது மக்களுக்கு தெரியாததுமல்ல.
எனவே இவ்வாறான வெற்று சவால்களை விடுத்து அடுத்த ஒரு சில வாரங்களில் இடம்பெறப் போகின்ற அமைச்சரவை மாற்றத்தில் மீள் குடியேற்ற அமைச்சை பெறுவதற்காக அவர் உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சு அவருக்கு வழங்கப்படாவிட்டால் அவரது அமைச்சை அவர் இராஜினாமாச் செய்தால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அதேநேரம் சம்மாந்துறையில் வைத்து ஒரு ஆசனமேனும் மு.கா. சை விட குறைவாகப் பெற்றால் தலைமைப் பதவியை ‘இராஜினாமாச் செய்வேன் ‘என்று பறை சாற்றிவிட்டு’ நான் நுணி நாக்கில் ஒன்றும் அடி நாக்கில் ஒன்றும் வைத்துப் பேசுவதில்லை.’ என்று அறிக்கையும் விட்டுவிட்டு அவ்வாறு தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்யாமல் இருப்பது நகைப்புக்கிடமானது. எனவே தான் ஒரே நாக்கினால் பேசுகின்றவர் என்பது உண்மையானால் தனது தலைமைப்பதவியை உடனடியாக இராஜினாமாச் செய்ய வேண்டும். அல்லது சம்மாந்துறையில் வைத்து நுணி நாக்கால் பேசினாரா அல்லது அடி நாக்கால் பேசினாரா என்று கூற வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது ‘நான் அடி நாக்கில் ஒன்றும் நுணி நாக்கில் ஒன்றும் பேசுவதில்லை’ என்ற அவரது கூற்றை அடி நாக்கால் பேசினாரா அல்லது நுணி நாக்கால் பேசினாரா என்பதையாவது கூற வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.