ஏமனில் 1 வாரம் சண்டை நிறுத்தம் : ஐ.நா.விடம் அதிபர் ஹாதி தகவல் !

அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதியின் அரசுப்படையும், அவருக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.

அதிபர் மன்சூர் ஹாதியின் கோரிக்கையின் படி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து குண்டுகளை வீசி வருகின்றன. கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.

download_x17x.jpg_1718483346

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமால் சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்த அதிபர் மன்சூர் ஹாதி கடந்த மாதம் ஏமன் திரும்பினார்.

அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பொதுசபை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்தன. இருந்த போதிலும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தும்படி அதிபரிடம் ஐ.நா. பொதுசபை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு வார காலம் (டிசம்பர் 15–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அதிபர் மன்சூர் ஹாதி சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சவுதி கூட்டுப்படைகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘இந்த ஒரு வார கால போர் நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மரியாதை அளிக்கவும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஏமனில் உள்ள ஐ.நா. தூதர் உறுதி அளிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.