ஷரீஆச் சட்டம் உங்களைப் போன்றோரிலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் !
இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டதிலிருந்து மனித வர்க்கமானது ஏற்று நடக்கக் கூடிய பூரண வாழ்வொழுங்கை (Life Style) போதிக்கின்ற ஒன்றாகும்.
இஸ்லாம் எமக்கு போதிக்கும் சிந்தனைகளும் வாழ்வியல் கோட்பாடுகளும் நடைமுறைக்கு உகந்த அறிவியல் சித்தாந்தங்களாகும். வெறுமனே வரட்டுவாதங்களையும் முரண் மூட்டைகளையும் (Bundle of Contradiction) கொண்ட வாதப் பிரதிவாதங்களல்ல அவை.
அவ்வாறேதான்! அது எமக்குச் சொல்லித் தரும் தண்டனை முறைமைகளுமாகும். குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் வரையறுக்கப்பட்டு
1. அவை புரியப்பட்ட சூழல்
2. நிரூபிக்கும் பாங்கு
3. குற்றம் புரிந்தவரை மன்னிப்பளிக்கும் நடைமுறை என இன்றைய நவீன சட்டங்கள் கூட வழங்காத பல முற்போக்கு விடயங்களை ஷரீஆ சட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.
நீதி மன்றங்களில் வழக்கை விசாரிக்கும் பிரதானமான இரு முறைகள் உண்டு
1.மாற்றாள்சார் முறைமை (Adversial)
2.விசாரணைசார் முறைமை
இஸ்லாம் எமக்கு கற்பித்து நடைமுறைப்படுத்த தூண்டுவது விசாரணைசார் முறைமையாகும்.
குற்றம் உண்மையில் நடந்துள்ளதா என்பதை அறிவதில் நீதிபதியின் பங்கு முக்கியமானது என்பது இம்முறைமையின் சிறப்பம்சமாகும். இதில் நீதிபதியின் பங்கு அதிகமானது.
‘ஒரு கண்ணை இழந்த நிலையில் உம்மிடம் வரும் ஒருவருக்கு அடுத்த தரப்பு வரும் வரை நீதி வழங்காதீர்கள். அருத்தவர் இரண்டு கண்களையும் இழந்தநிலையில் வரலாம்.’ – உமர் (றழி)
இஸ்லாமிய கிலாபத்தில் நீதியான ஆட்சிக்கு பெயர் போன உமர் (றழி) அவர்களின் கூற்று இதுவாகும்.
‘நான் உமர் (றழி) இன் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சியையே விரும்புகிறேன்’
என தேர்தல் ஆணையாளரான மஹிந்ததேசப்பிரிய அவர்களின் கருத்தே இதனை எமக்கு தெளிவாக புலப்படுத்துகிறது.
இவ்வாறான பரந்த அறிவியல் வரலாற்று பின்னணியைக் கொண்ட ஷரீஆச் சட்டம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்ற கருத்தில் நானும் இஸ்லாமியன் மற்றும் சட்டத்துறை சார்ந்தவன் என்ற ரீதியில் உடன்படுகிறேன். ஆமோதிக்கிறேன்.
ஆனால், உண்மையில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது.
அதே போன்று, ஒரு முஸ்லிம் உண்மையில் முஸ்லிமாகவே நடந்து கொள்கின்றானா என்பதை யாரும் விமர்சிக்கலாம்.
அதை தடுக்கும் உரிமை எந்த முஸ்லீமுக்கும் கிடையாது. இதுவே ஒரு ஆரோக்கியமான சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், குற்றமிழைத்த ஒருவருக்கு கல்லெறிந்து கொல்லும் நடை முறையை விமர்சித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவருடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர் எமது சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.
ஷரீஆ சட்டத்தை சர்வதேச ரீதியில் எதிர்க்க வேண்டும் என்ற கருத்துக்கு பல கண்டனங்கள் எழுந்துள்ளன.
உண்மையில், இக்கூற்று இச் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளின் நடைமுறை சார்ந்த விமர்சனமே என்பது எனது பார்வை.அத்துடன், இஸ்லாத்தின் தூய போதனைகளை எத்திவைக்க வேண்டிய கடப்பாட்டையும் எமக்குச் சுட்டுகிறது.பொதுவாக, இஸ்லாத்தில் முரண்பாடுகளைப் புகுத்தவும் குழப்பங்களை ஏற்படுத்தவும் பல கீழைத்தேயவாதிகள் (Orientalist) முயன்றனர் என்பதை நாம் வரலாற்றினூடாக கண்டு கொள்ள முடியும்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தமது வாதத்தில் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை புதிய ஏற்பாட்டடில் (New Testament) இயேசுவே தடுத்துள்ளார்கள் என சிலாகித்துள்ளமையும் இங்கு வாதத்துக்குரிய விடயமாகும். புனித பைபிளில் Leviticus 20:10 வசனமானது கட்டாயமாக சோரம் போன ஆண் மற்றும் பெண் இருவரும் கல்லெறிந்து கொள்ளப்பட வேண்டும் என்கிறது.
அதே போன்று, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்ட வசனமானது Jhon – 2-8 வரையான வசனங்களாகும். இங்கே குற்றம் புரிந்ததாகக் கூறி பெண் மட்டுமே அழைத்து வரப்பட்டாள். ஆண் கொண்டு வரப்படவில்லை. எனவே, பெண்ணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது நீதியாகாது என்பதால் தான் இயேசுநாதர் அவர்கள் அதனைத் தடுத்தார்.
மேலதிக வாசிப்புக்கு….
http://erikbrewer.wordpress/ 2011/12/03/did – jesuscontrdict the bible by stoning the woman caught on adultery
இதையெல்லாம் தவிர்த்து,
இங்க பேசப்பட வேண்டிய முக்கியமான விடயமொன்றும் இருக்கின்றது.
இன்று முஸ்லிம் நாடுகள் என அடையாளப்படுத்தப்படும் மத்தியகிழக்கு நாடுகளில் இஸ்லாமிய அடிப்படையிலா அனைத்து விடயங்களும் இடம் பெறுகின்றன என ஒருவர் கேட்டால் நாம் என்ன விடையளிப்பது?
தொழுகின்றார்களா? ———————— ஆம்
நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றுகிறார்களா? ———— ஆம்
இது மட்டுமல்ல இஸ்லாம்……
தங்களது வாழ்வாதாரத்துக்காக வேலைக்கு வரும் பெண்களை கெரளவமாக இந்த அரபிகள் நடத்துகிறார்களா?
இஸ்லாமிய அடிப்படையில் இவ்வாறு வேலைக்கு பெண்களை அமர்த்த முடியுமா?
மேலும் தொழிலாளர்களுக்கிடையிலான ஒப்பந்தங்களின் சரத்துக்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா?
ஒப்பந்தங்களை மத்திய கிழக்கு நாட்டு பிரஜைகள் மீறும் போது தொழிலாளர் ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு தீர்வு வழங்கப்படுகிறதா?
பல மாதங்களாக சம்பளமும் வழங்கப்படாமல் போதியளவு உணவும் இல்லாமல் உடல், உள ரீதியான பல துன்புறுத்துதலுக்கு தொழிலாளர்கள் ஆகவில்லையா?
தொழிலாளியின் வியர்வை சிந்துவதற்கு முன் அவனது ஊதியத்தை கொடுத்துவிடு என்று இஸ்லாமிய மார்க்கம் கூறவில்லையா?
ஒரு முஸ்லிமுக்கு இன்னுமொருவருடைய செல்வம், மானம், உயிர் என்பவற்றின் மீது உரிமைப் பெறுவது தடுக்கப்பட்டது என்பதை இஸ்லாம் கூறவில்லையா?
அடிமைகளை விட கேவலமாக நடாத்தப்படும் இவர்களுக்கு தீர்வினை யார் வழங்குவது?
அரேபிய நாடுகளில் கலாசாரச் சீரழிவு தலை விரித்தாடுகிறது என்பதை நாம் இஸ்லாத்துக்காக மறைத்துக் கூற முடியுமா?
பரம்பரை ஆட்சி கெட்டுவிடக் கூடாது என்பதற்காக எகிப்தில் ஏற்பட்ட மக்களாட்சியை ஏனைய அரபு நாடுகள் ஒடுக்கியதை யாரிடம் சொல்வது? 18.03.2013 அன்று மண்ணம்பிட்டிய தபால் அலுவலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்ணின் பர்தாவை கழற்றுமாறு கூறியதற்கு அப்பெண் மறுக்கவே உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற குறித்த பெண்ணின் முறைப்பாடு பொலிசாரினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பாராளுமன்றத்தில் இது தொடர்பிலும் முஸ்லிம்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத ரீதியான, பொருளாதார ரீதியான, கலாச்சார ரீதியான அச்சுறுத்தல் தொடர்பில் உரையாற்றிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்களை உரையாற்ற விடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்திய பெருமை எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களைச் சாறும். இந்த நிகழ்வு என்னை அதிகமாக பாதித்தது.
இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே!
இஸ்லாத்தினதும் அதன் சட்ட நடைமுறைகளினதும் மீதான அசைக்க முடியாத பற்று எனக்குண்டு. ஆனால், உங்களுக்கில்லை என்பதே எனது ஆதங்கம்.
இதுவே, எனது இக்கட்டுரையின் நோக்கமும் கூட…
கருக்கலைப்புக்கு ஆதரவு வழங்கும் சட்ட மூலத்தை நீங்கள் எதிர்த்த போது உங்களது இஸ்லாமியப் பற்று எங்களுக்குப் புரிந்தது. ஆனால், இஸ்லாம் அடியோடு வெறுக்கும் சூதாட்டத்துக்கு சார்பான சட்ட மூலத்துக்கு நீங்கள் முன்வரிசையில் நின்று ஆதரவுதந்த போது உங்களது அரசியல் பேரம் பேசும் அரசியலல்ல… சோரம் போகும் அரசியல் என்பது எங்களுக்குப் புரிந்து போனது…
அவ் வேளையில், அச்சட்ட மூலத்தை தடுத்தது யார்?
அல்-குர்ஆன் வசனத்தை காண்பித்து இதே பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்களால் மு.கா, அ.இ.ம.கா, தே.கா, மற்றும் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய கௌரவ முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இஸ்லாத்தை சொல்லித் தரும் தருணம் ஏற்படவில்லையா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவையின் அமைச்சராக இருந்து கொண்டு கௌரவ அமைச்சரர் சம்பிக ரணவக அவர்களும் ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த சூதாட்ட சட்ட மூலத்தை பலமாக எதிர்த்த பெருமை அவர்களைச் சாறும்.
வெளிப்படையாக தெரியக் கூடாது என்பதற்காகவே வேறு பெயரில் அச் சட்டம் இயற்றப்பட்டால் இறைவனுக்குமா அது தெரியாமல் போகும்?
நடு நிலையாக யோசிக்கும் எல்லோருக்கும் உங்களது நரித்தனமும், எலும்பு கவ்வும் அரசியலும் புரிந்து போயிற்று.
இஸ்லாம் தடுத்த ஒரு விடயத்தை ஆகுமாக்க துணை போய்விட்டு இன்று மதம் சார்ந்த கொடியைத் தூக்கிப்பிடிக்கும் அருகதை இழந்த அனாதைகள் நீங்கள்.
வெறுமனே! அரபு நாடுகளின் ரியால்களில் ஷஹாதத்தைத் தேடாதீர்கள்.
ஷரீஆச் சட்டம் உங்களைப் போன்றோரிலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா.
ரியால்களில் உங்கள் மோட்ச்சத்தை தேடாதீர்கள்…