ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

 

ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

obama

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த வாரம் பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதி நடத்திய தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் ஆவேசம் அடைந்து இருக்கிறார். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இருந்தவாறே தொலைக்காட்சி வாயிலாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:– 

அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் வெற்றிகரமாக முறியடிப்போம். ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழித்து கட்டுவோம். கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு நிச்சயமாக ஒரு தீவிரவாத தாக்குதல்தான். 

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதைப் பொருத்தவரை அமெரிக்க ராணுவ தளபதிகள், தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள், 65 நாடுகளின் கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு அவர்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய உத்தியாகும். 

ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது வேறு அமைப்பினர் யாராக இருந்தாலும் எங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களை பூண்டோடு வேரறுப்போம். 

தீவிரவாதத்தை அமெரிக்காவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போராக மாற்ற முயற்சிக்கக்கூடாது. ஆனால் தீவிரவாதிகள் இதைத்தான் விரும்புகிறார்கள். எனவே இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது. 

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஈராக்கிற்கோ, சிரியாவுக்கோ நமது விலைமதிப்புமிக்க தரைப்படையை மீண்டும் அனுப்பி வைக்கமாட்டோம். ஆனால் இதைத்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்ற குழுக்கள் விரும்புகின்றன. நம்மை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். 

அதேநேரம், நாம் நேரடியாக அன்னிய மண்ணை ஆக்கிரமித்தோம் என்றால் அவர்களால் நீண்ட காலத்துக்கு தீவிரவாதத்தை தொடர முடியும். ஆயிரக்கணக்கான நமது தரைப்படையினரை கொல்ல இயலும். நமது வளங்களை இழக்க வைக்க முடியும். 

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக போராடும் உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து இழந்த பகுதிகளை மீட்பது ஆகியவற்றில் நமது சிறப்பு படையினர் பணியாற்றுவது போன்றவைதான். எனவேதான் இந்த போரில் நமக்கு நிலைக்கத்தக்க வெற்றி கிடைத்து இருக்கிறது. 

எனவே அன்னிய மண்ணில் இன்னொரு பத்தாண்டுகளுக்கு நமது படை வீரர்கள் அனுப்பப்பட்டு அங்கே வீரர்கள் பலியாவதை நாம் விரும்பவில்லை. 

தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும், அவர்களின் சிந்தனைகளுக்கு எதிராகவும் தங்களுடைய குரலை வெளிப்படுத்தவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.