நம் சகோதரிகளின் வாழ்வைப் பற்றி, மனைவியர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்க தவறிக் கொண்டு இருக்கின்றோம்!

 

பணிப்பெண்களாக பெண்கள் வெளிநாடு சென்று துன்புறுத்தப்படுவதை தடுப்போம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Lankan maids_0

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே..!!! உலமாக்களே..!!! பள்ளிவாசல் நிர்வாகிகளே..!!! சமூக அக்கறை கொண்டவர்களே…!!! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் சமூகத்தில் நிலவும் இவ் அவலத்தை போக்குவதை நோக்காக கொண்டு “மாற்றம் தேவை“ என்ற பெயரில் இலங்கை வாழ் மற்றும் வளைகுடா வாழ் நண்பர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் போன்றோரை ஒரு குழுமமாக இணைத்துக் கொண்டு இவ் விழிப்புணர்வுப் பதிவை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் மாற்றம் தேவை குழுமத்தினுாடாக வெளியிடுகின்றோம்.

இன்று நமது நாட்டிளே அதிகளவான பெண்கள் தொழில் நிமிர்த்தம் காரணமாக வெளிநாடு சென்று அங்கே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இதில் எமது பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களும் அடங்காமலில்லை. தங்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள, தங்களது குடும்பங்களை அதிலிருந்து மீட்டுக் கொள்ள நமது பெண்கள் வெளிநாட்டு மோகத்துக்கு ஆட்பட்டு அங்கே சென்று விளக்கில் விழுந்த வண்டு போல் மாட்டிக் கொண்டு பல இன்னங்களைச் சந்திக்கின்றார்கள், உயிர்களையும் பறிகொடுக்கின்றார்கள்.

வெளிநாடு செல்லும் பெண்கள் யாரும் அங்கே ராணி போன்று நடாத்தப்படுவதில்லை காசு கொடுத்து வாங்கிய அடிமையாகவே நடாத்தப்படுகின்றார்கள். நிறைய நம் நாட்டுப் பெண்கள் ஊதியம் வழங்கப்படாமல் பல வருடங்களாக உடல், உள ரீதியாக பல சித்திரவதைகளையும் அனுபவித்துக் கொண்டு எந்த வித பொருளாதார முன்னேற்றமும் இன்றி சென்றதை விடவும் மோசமாக அவலப்பட்டுத்துத்தான் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

வீட்டு வேலைகளுக்காக வெளிநாடு செல்கின்றவர்கள் பெண்கள் என்ற ரீதியில் அவர்கள் பாலியல் ரீதியாகவே அதிகமாக துன்புறுத்தப்படுகின்றார்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அவர்களது வீட்டு எஜமானர்களால் மாத்திரமன்றி அந்த எஜமானரின் பிள்ளைகளாலும் அங்கே இருக்கும் நம் நாட்டவர்களாலும், ஏனைய நாட்டவர்களாலும் அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றார்கள். கற்பிழந்தும், கருத்தரித்தும், தரித்த கருவை மரித்தும் பெண்கள் அங்கே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்படுகின்றார்கள், கஷ்டப்படுகின்றார்கள், வாழ்க்கையில் நஷ்டப்படுகின்றார்கள்.

இன்று வளைகுடா நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் அதிகமானோர்களில் கணவனை இழந்தவர்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், கணவனால் விவாகரத்துப் பெற்றவர்களும், குமருப் பெண்களைப் வைத்துக் கொண்டு அவர்களை கரை சேர்க்க முடியாதவர்களும், கணவன் இருந்தும் அவரது கையாலாகத்தனத்தின் காரணமாக குடும்ப சுமையை சுமந்த வீ்ட்டுத் தலைவிகளும், குடும்பத்தால் கவனிக்கப்படாதவர்களும் மற்றும் கணவன்மார்களால் வழியனுப்பி வைக்கப்பட்ட பெண்களுமே அதிகம் அதிகமாக இன்று வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள்.

சில ஆண்கள் தங்களது மனைவியர்களின் சம்பாத்தியத்தில் கால் ஆட்டி ஆட்டி உண்டு குடித்து வாழ்வதற்காக மனைவிமார்களை வெட்கமில்லாது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு பிறரின் பாலியல் தேவைகளுக்கு தங்களது மனைவிமார்கள் இரையாக வழிசமைத்துக் கொடுக்கின்றார்கள்.

என்ன மனிதர்கள் நாம்…??? இன்னும் நம் சகோதரிகளின் வாழ்வைப் பற்றி, மனைவியர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்க தவறிக் கொண்டுதானே இருக்கின்றோம்.

நம் சமூகத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேரும் இது விடயத்தில் அதிகம் அதிகமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களது வீட்டில் இருந்து யாரும் வெளிநாடு செல்லவில்லை ஆகவே நாங்கள் ஏன் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று வெளிநாடு செல்லும் பெண்கள் விடயத்தில் நாம் சுயநலமாக இருந்து விட முடியாது.

ஒரு பெண் பிழைப்புக்காக பல ஆயிரம் மையில் கடந்து தனித்துச் சென்று அடிமை போல் அதுவும் வெறும் 600 றியால் 700 றியால் சம்பளத்துக்குச் வேலை செய்யச் செல்கிறாள் என்றால் அவளது குடும்பத்தில் உள்ள ஆண்வர்க்கமும், அவள் செல்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமூகமாகிய நாமும் வெட்கித்தலை குணிய வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றுசானா நபீக் தொடக்கம் இன்று கல்லெறிந்து கொல்லப்படும் தண்டனை வழங்கப்பட்டுள்ள தெஹிவளைப் பெண் வரை அங்கே அவலப்படும் அத்தனை பேருடைய சாபாத்துக்கும் அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் செல்வதை தடுக்க முற்படாதிருந்த அந்தந்த பிரதேச தனவந்தர்களும், உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், ஸகாத் நிதியங்களும், சீதனம் என்ற பெயரில் விலைபேசும் பெற்றோர்களும், இளைஞர்களுமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஒரு பெண் தனது கணவர் மற்றும் தந்தை, சகோதரர்கள் போன்ற மஹ்ரமான ஆண் துணையின்றி தனித்து எங்கும் செல்வதை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது அப்படியிருக்கையில் நம் பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் வெளிநாடு செல்கிறாள் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்களும், அந்தப் பிரதேசத்து உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்களும் ஏன் அனுமதிளிக்கிறார்கள்…??? இந்தப் பெண்கள் வெளிநாடுகளில் அவலப்படும் போது அதற்கு நாம் அத்தனை பேரும் பொறுப்புதாரிகள் அல்லவா…??? நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே இது நாம் வெறுமனே வாசித்து விட்டு பேசிவிட்டுச், கேட்டு விட்டுச் செல்லும் மிகச்சாதாரணமான விடயமல்ல.

நம் நாட்டு அரசாங்கம் வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பாக வயது குறைந்த பெண்கள் செல்வதையும், ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதையும் தடுக்கும் வண்ணம் சட்டங்கள் கொண்டுவந்திருக்கின்றது இருந்த போதும் சில கிராம சேவகர்களும், சில பிரதேச செயலக அதிகாரிகளும், சப் மார்களும் மற்றும் வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளர்களும் லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டும், பல லட்சம் ரூபாய் இலாபத்தை மையமாகக் கொண்டும் போலி ஆவணங்களை தயாரித்து அப்பாவி பெண்களை பல பொய்கள் கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அத்தனை பேரும் இறைவனுக்குப் பயந்து கொள்ளட்டும்.

வெளிநாடுகளுக்கு நம் பெண்கள் செல்வதை தடுக்க வேண்டியதும், அவர்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் தனவந்தர்களதும், அரசியல்வாதிகளதும், பள்ளிவாசல் நிர்வாகிகளதும், ஸகாக் நிதியங்களதும் மற்றும் பொதுமக்களாகிய எங்களதும் சமூகக் கடமையாகும்.

ஆகவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே..!!! உலமாக்களே..!!! பள்ளிவாசல் நிர்வாகிகளே..!!! சமூக அக்கறை கொண்டவர்களே…!!! அரசியல்வாதிகளே…!!! அதிகாரிகளே…!!! வெளிநாடு செல்வதையிட்டும் நம் பெண்களை தடுக்க வேண்டுமானால்,

01. வெளிநாடுகளுக்கு பெண்கள் சென்று அவதியுறுவதை தடுக்க பொதுமக்களுக்கு சிறந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சமூக சேவை அமைப்புக்கள் முன் வர வேண்டும்.

02. வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை நம் நாட்டிலேயே ஏற்படுத்திக் கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தனவந்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் போன்றோர் உதவ முன்வர வேண்டும்.

03. லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்து பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவோர் விடயத்தில் தகுந்த சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

04. கணவன்-மனைவியாக அல்லாத தகுந்த பாதுகாவலன் இல்லாது பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

05. சமூகத்தில் உள்ள விதவைப் பெண்களை, ஆதரவற்ற குடும்பங்களை இணங்கண்டு அவர்களுக்கான உதவிகளை ஸகாத்கள் போன்ற நன்கொடைகள் மூலமாக, இதர அரச-மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவும் செய்தல் வேண்டும்.

06. பெண்கள் வெளிநாடு செல்வதற்கு சீதனமும் ஒரு காரணமாகையினால் பெண் வீட்டார் மாப்பிள்ளைமார்களுக்கு அன்பளிப்பாக விரும்பிக் கொடுப்பது அல்லாத ஏழைக் குமர்களிடம் விலை பேசி சீதனம் பெற்றுக் கொண்டு நடைபெறும் திருமணங்களை மார்க்க அறிஞர்கள் முன்னின்று நடாத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

07. இளைஞர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் போது பெண் வீட்டார்களிடம் எங்களுக்கு இவ்வளவு சீதனம் வேண்டும், காணி-பூமி வேண்டும் என விலைபேசி திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு விலைபேசி மாப்பிள்ளைமார்களுக்கு சந்தையில் அதிக விலையாகிப் போனால் பாதிக்கப்படுவது ஏழைக் குமர்கள் தான் என்பதையும் மனதில் இருத்தி அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ள வேண்டும்

08. வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் மேற்கொள்ளும் போது வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று துன்பப்படும் பெண்கள் விடயமும் பேசப்பட வேண்டும். அதன் பாதக விளைவுகள் மார்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் எடுத்துக் கூறப்பட வேண்டும்.

09. பெண்கள் எவ்வித வறுமை நிலை வந்தாலும் அதனை போக்குவதற்கான வழியை நமது சொந்த மண்ணிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அதனை விட்டு விட்டு வெளிநாடு சென்றுதான் அதனை போக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

10. எல்லாவற்றுக்கும் மேலாக பேராசை, போலி கௌரவம், பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் இருப்பதைக் கொண்டு மோதுமாக்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொருவரும் இவ்விடயத்தினை மனதிலிருத்தி அதிகம் அதிகமாக விழிப்புணர்வுகளையும், தெளிவுகளையும் ஏற்படுத்தி நம் பெண்களை, சகோதரிகளை நல்வழிப்படுத்த வேண்டும். அத்தோடு அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கும் உதவும் வண்ணம் சிறப்பான செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு.

மாற்றம் தேவை குழுமம்.

1368682779