வட பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நேரடியாக சென்று ஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த வாரம் வட பகுதிக்கு செல்லும் குழுவுடன் எதிர்க் கட்சி, ஆளும் தரப்பு உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்தார்.
இந்தக் குழு அங்கு சென்று இரண்டு வாரத்துள் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதனடிப்படையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி கூறியதுடன் அடுத்த வாரம் புறப்படும் குழுவுடன் செல்வதற்கான அழைப்பை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிப்பதாகவும் அங்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மன்னார்.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாக சார்ள்ஸ் நிர்மலன் எம்.பி. மற்றும் பிமல் ரத்னாயக்க எம்.பி. ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதேபோன்று சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வுகள் நடைபெறுவதாக பரவலான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை கடந்த அரசு காலத்தில் பொருளாதார அமைச்சின் மூலமே வடக்கில் காடுகள் அழிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தன எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டே இவை வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
சட்டவிரோத மரம் வெட்டுதல், காடழித்தல், மாணிக்கக் கல் அகழ்தல், கல் உடைத்தல், மணல் அகழ்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு ஏதிராக கட்சி பேதம், அந்தஸ்து இன்றி கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படுமென்றும் அவர் கூறினார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் எச்சந்தர்ப்பத்திலும் மாணிக்கக் கல் அகழ்விற்கு வெளிநாட்டு கம்பனிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது. இது அரசாங்கத்தின் கொள்கை என்றும் ஜனாதிபதி உறுதிபட தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் காடழி்ப்பினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு சில மாதங்களுக்கு முன்னர் நான் முப்படை, பொலிஸ் மற்றும் வனசீவராசிகள் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தேன். அதனையும் மீறு காடழிப்பு இடம்பெறுமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென்றும் நான் கூறியிருந்தேன்.
2013 ஆம் ஆண்டில் பல காணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கேட்டபோது அது பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானமென அவர்கள் பதிலளித்தனர். மன்னாரில் 2500 ஏக்கர், வவுனியாவில் 325 ஏக்கர், முலைத்தீவில் 445 ஏக்கர் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மீள்குடியேற்ற காணிகளை பொறுப்பேற்றாலும் காடழிப்பதற்கு இடம் வழங்கக்கூடாது என்றும் அவ்வாறான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் நான் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர்தான் மாணிக்கக் கல் அகழ்வதற்கு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றதும் முதலில் இலங்கையிலிருந்த 04 வெளிநாட்டு கம்பனிகளினதும் அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்தேன்.
மாணிக்க கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மீண்டும் இந்த அனுமதிப் பத்திரங்களை வழங்கியிருந்தார். ஆனால் நான் அந்த தலைவரை பதவியிலிருந்து நீக்கியதுடன் மீண்டும் அனுமதிப் பத்திரங்களையும் ரத்துச் செய்தேன்.
எச் சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு கம்பனிகள் மாணிக்கக் கல் அகழ்விற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. என்றாலும் வெளிநாட்டவர்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுத் தரப்படுமெனவும் அவர் கூறினார்.
உலக காலநிலை, வானிலை மாற்றத்துக்கமைய இலங்கையிலும் அரசாங்கம் திடமான கொள்கைகளை பின்பற்றும் ஓசோன்படை, விலங்குகள், வனங்கள், கனிய வளம் என்பன பாதுகாப்பாக எதிர்கால சந்ததியினரிடம் கையளிக்கப்படும்.
சூழல் மாசடைதலுக்காக வழக்கத்திலுள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவையேற்படின் புதிய சட்டம் உருவாக்கப்படும். ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தீனுக்கும் 2018 முதல் எஸ்பெஸ்டஸ் பாவனைக்கும் இலங்கையில் தடை விதிக்கப்படும்.
கடல் முகாமைத்துவம் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.