வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல்காந்தி இன்று சென்னை வருகின்றார் !

சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்னை வருகிறார். அவரை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

Rahul_Gandhi_close_AFP_650
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் காலை 9.30 மணிக்கு புதுச்சேரி புறப்பட்டு செல்லும் ராகுல்காந்தி, அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கி, அதன் பிறகு காரில் வெள்ளச் சேதங்களை பார்வையிட செல்கிறார். தொடர்ந்து, கடலூர் மாவட்டத்திலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.

கடலூர் மாவட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிறகு, காரில் புதுச்சேரி வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். சென்னையில், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், அவர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு ராகுல்காந்தி வருகிறார். அங்கு வீடுகளை இழந்து தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். பின்னர், சென்னை விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பயண திட்டம் குறித்து, நேற்று சென்னை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ராகுல்காந்தி செல்லும் இடங்களில் ஒரு சிலவற்றிற்கு நேரிடையாக சென்று அவர் பார்வையிட்டார்.

தமிழகம், புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வருவதையொட்டி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.