வடமாகாண சபை கண்டுகொள்ளாத வடமாகாண முஸ்லிம்கள் !

 இலங்கையின் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த வடமாகாண சபைக்கான தேர்தல் கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பெற்று தற்போது இரண்டு வருடங்களையும் தாண்டிய நிலையில் அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்களுக்கு பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய போதிலும் அதனால் சரியாக இயக்க முடியாத நிலைமைகள் காரணமாக பாரிய அபிவிருத்திகள் இடம் பெறாத நிலைமைகள் காணப்படுவதாக பலமான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

tna
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளில் வடமாகாண மக்களை தமது கட்சியின் ஆட்சியில் சிறப்பான பாதையில் கொண்டு செல்வதாகவும், யுத்த காலத்தில் இழந்தவைகளை மீண்டும் பெற்றுக் கொடுத்து பேரிவாதத்திற்கு பாடம் புகட்டும் ஒரு மாகாண சபையாக எமது சபையை கொண்டு செல்வோம் என்று கூறியவர்கள் இன்று தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களும் இடம் பெறவில்லை என்பதே மக்களின் குறைகள் அதிகமாக இருந்து வருகின்றமையை; சுட்டிக்காட்டலாம்.
மேற்படி நிலைமைகளுக்கு மத்தியில் வடக்கில் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் காணப்படுகின்றனர். கடந்தகால யுத்த அனர்த்தங்களின் துர்அதிஸ்டவசமான செயற்பாடுகளால் வடமாகாண முஸ்லிம்களில் சுமார் என்பது வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் 1990ஆம் ஆண்டு துரத்தப்பட்டு இன்று வரை வடமாகாணத்திற்கு வெளியே அகதிகளாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாதொரு வேளையில் வடமாகாணத்தில் இரண்டாவது பெரும்பான்மையாகக் காணப்படும் முஸ்லிம் மக்களின் விடயத்திலும் வடமாகாண சபை எந்தவித பங்களிப்பும் செய்யாது பாரபட்சம் காட்டிவரும் நிலைமைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இருபது வீதமானவர்கள் மீளக் குடியமர்ந்துள்ளனர் அம்மக்களுக்குக் கூட வடமாகாண சபையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ இன்று வரை ஒன்றையும் செய்யவில்லை.
அதுமட்டுமல்லாது மீளக்குடியமரும் முஸ்லிம்கள் விடயத்திலும் ஒருசில வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது இனவாதச் செயற்பாடுகளைக் காட்டி அவர்கள் மனங்களில் கவலையையும், பிரச்சினைகளையும் தோற்று விக்கின்ற கைங்கரியங்களும் தாராளமாகவே இடம் பெற்று வருகின்றமையையும் காணக் கூடியதாகவுள்ளது.
வடமாகாண சபையால் கடந்த இரண்டு வருடங்களில் ஒரு முஸ்லிம் கிராமத்தையோ அல்லது மீளக் குடியமர்ந்த மக்களில் ஒரு தொகுதியினருக்காவது அவர்கள் அரச பணத்தில் ஒன்றையும் செய்ய வில்லை என அந்த மக்கள் குற்றஞ் சுமத்துவதுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்து முஸ்லிம் சமுகத்திற்கு செய்த சேவைகள் அல்லது அபிவிருத்திகளையாவது ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வருவார்களா? என்ற சவாலையும் விடுகின்றனர்.
மத்திய அரசால் கிடைக்க வேண்டிய உதவிகளைக் கூட தடை செய்யும் அல்லது அவற்றகை; கிடைக்காது செய்யும் விடயங்களிலும், தேவையறற் விடயங்களில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான விமர்சனங்களைக் கூட ஒரு சில அரசியல் வாதிகள் தெரிவித்து தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு புது முறையைக் கையாழுவதையும் தற்போது காணக் கூடியதாகவுள்ளது.

Muslims_Resettle_3
வடமாகாண சபையின் உண்மை நிலைமைகளையும், அதன் வங்குறோத்து நிலைமைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா கடந்த புதன் கிழமை பாராளுமன்றத்தில் புள்ளி விபரங்களுடன் தெரிவித்தமை சான்றாக அமைவதையும் இங்கு குறிப்பிடலாம்.
இவ்வருட நிதியில் கடந்த ஒக்டோபர் வரை முழு நிதியில் 38 வீதமான நிதியே செலவழித்துள்ளனர் என்றும் கடந்த வருட நிதியில் சுமார் 690 மில்லியன் ரூபாவை செலவு செய்ததாக கூறி வங்கியில் வைப்பிட்டு இவ்வருடம் அவற்றைச் செலவு செய்து வருவதாகவும் இவ்வாறு அரசால் மக்களின் நலன்களுக்காக ஒதுக்கும் நிதியினை அந்த மக்களைச் சென்றயை வைக்காது கபடத்தனம் செய்வதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலா? அல்லது அபிவிருத்திகளை செய்யத் திராணியில்லையா? அல்லது வேறு நோக்கமா? போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.
வடமாகாணத்தைப் பொருத்த வரையில் அங்கு வாழ்ந்த அனைத்து மக்களும் ஏதோ ஒருவகையில் யுத்தத்தால் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள்தான். இந்த வகையில் அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவோம் என்று கூறிக் கொண்டு அரசாங்கத்தை குறை கூறுவதும், தேவையற்ற விமர்சனங்களையும் செய்வதை வடமாகாண சபை உறுப்பினர்கள் நிறுத்திவிட்டு அரசால் மக்களுக்கு என ஒதுக்கும் அரச நிதிகளை உரிய முறையில் அபிவிருத்திகளில் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய மாகாண சபைகளை விடவும் முன்மாதிரியான சபையாக தாம் நடத்திக் காட்டுவோம் என்று கூறிய வடமாகாண சபை உறுப்பினர்களும் அந்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் சென்றுள்ள நிலைமைகளை பாராளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவாந்தாவின் கருத்துக்களும் காட்டி நிற்கின்றன.

c.v. vigneswaran
வடமாகாணத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் வேளைத் திட்டங்கள்தான் இன்று வரை அதிகமாக இடம் பெறுவதாக மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வன்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பாராளுமன்றத்தில் தான் அமைச்சராக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட அபிவிருத்தி, வீடமைப்பு விடயங்களிலும் பல சேவைகளையும் செய்ததுடன் பலருக்கு தொழில் வாய்ப்புக்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்று பாராது அனைவருக்கும் வழங்கியுள்ளதாகவும் அழிந்துபோயுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மடு, மாந்தை, முசலி போன்ற பிரதேசங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தமை வடமாகாணத்தில் வடமாகாண சபையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ செய்த சேவைகள் கேள்விக் குறியாகவே உள்ளதாக மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சமய ரீதியான பாகுபாடு காட்டாது வடக்கில் சகலருக்கும் சேவை செய்ய வேண்டும் என தெரிவித்த கருத்தும் இங்கு முக்கியமாக நோக்க வேண்டியுள்ளது.
வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் தற்போது ஆட்சியில் இருக்கும் வடமாகாண சபைக்கே பொறுப்பான விடயமாகும். இந்த வகையில் அரசுடன் இணைந்து கிடைப்பனவற்றைக் கொண்டு எவ்வளவு உச்ச பயனை மக்களுக்கு வழங்க முடியுமோ அதனை வழங்குவதே தற்போதைய நிலையில் சாலச் சிறந்த விடயமாகும்.
இந்த வகையில் வடமாகாணத்தில் இரண்டு இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் வடமாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் மீள் குடியேறிய முஸ்லிம்கள் விடயத்திலாவது வடமாகாண சபை அக்கறை செலுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையாவது நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர அபிவிருத்தியில் அவர்ளை கண்டு கொள்ளாது இருப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேவையுடைய முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் அது வடமாகாண சபையின் கையில்தான் உள்ளது. இவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்ளாது முஸ்லிம் சமுகத்தினையும் மதித்தது அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டியதே வடமாகாண சபையின் கடப்பாடாகவுள்ளது.
எனவே வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய சகல உதவிகளையும் வழங்கி வடமாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண சபைக்கும் அதனை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் உள்ள விடயமாகும்.

 

சத்தார் எம் ஜாவித்