வெனிசுலா நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆளும்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
வெனிசுலா நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதனால், 2019-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அப்போதைய ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் அறிவித்தார், ஆனால் 2013-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டதால், வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடுரோ பொறுப்பேற்றார்.
ஆனால் இவரது ஆட்சியில், பொருளாதார பற்றாக்குறை, லஞ்ச ஊழல் மற்றும் கழிப்பறை காகிதம் போன்ற அடிப்படை பொருட்களுக்கு கூட பரவலாக தட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி (நேற்று) வெனிசுலா பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என வெளியான கருத்துக்கணிப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய குடியரசு கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
167 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 99 இடங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆளும் சோஷலிஸ்டு கட்சி வெறும் 46 இடங்களையே கைப்பற்றியுள்ளது. மீதி 22 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, தன் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்த பொருளாதாரப் போரில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
வெனிசுலா நாட்டின் 16 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சி வெற்றிபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.