தென்கிழக்குப் பல்கலையின் கல்வி செயற்பாடுகளும்; எதிர்கொள்ளும் சவால்களும் !

 

seusl

 

தேசிய, சர்வதேச ரீதியில் தொழில்சார் சந்தைக்கு தேவையான தர நிர்ணயம் வாய்ந்த துறைசார் தொழில் வாண்மையாளர்களை வழங்கும், நாட்டிலுள்ள உயர் கல்வி பீடங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் தனது வகிபாகத்தில் எவ்வித குறைபாடையும் வைக்காது கடந்த இரண்டு தசாப்த கால கல்விப் பணியில் புத்தி ஜீவிகளை உருவாக்கும் கடின பணியில் உழைத்து வருகின்றது. 

நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் எவ்வகையிலும் பின்தங்கவில்லை என்பதற்கு 20 வருடங்களைத் தாண்டிய விவேகமான செயற்பாடுகள் காலச் சுவடுகளில் பதியப்பட்டுள்ள மிக அழுத்தமான செய்திகளாகும். 

இப்பல்கலையின் நிர்வாக முகாமைத்துவக் கட்டமைப்பின் அங்கங்களான உபவேந்தர், பீடாதிபதிகள், பதிவாளர் துறைபோந்த விரிவுரையாளர்கள், கவுன்ஸிலர்கள், என கல்விச் சமூகம் வழங்கிவரும் அபரிதமான தடங்கல்களைக் கையாளும் திறன் கொண்ட பரிணாமத்தின் நெறியாள்மை என்பன இதன் வளர்ச்சிப் பாதையில் பெருமை தரும் மிடுக்கு. 

1995ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் பெரு முயற்சியினால் இதே ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் 1996ம் ஆண்டு முழுமையான பல்கலைக்கழகமாக மாறியது. 

இங்கு கலை, கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், இஸ்லாமியக் கற்கை, அரபு மொழி பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் என ஐந்து பீடங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

இறுதியாக நிறுவப்பட்ட பொறியியல் பீடம் 2013ம் ஆண்டில் தனது முதலாம் வருட கற்கை நெறிக்காக 92 மாணவர்களையும் 2014ல் 99ம் மாணவர்களையும், 2015ல் 92 மாணவர்களையும் உள் வாங்கியுள்ளது. மொத்தம் 283 மாணவர்களுக்காக சிவில் எஞ்ஜினியரிங், எலக்றிக் எலக்ரோனிக் எஞ்ஜினியரிங், மெகானிஸம் எஞ்ஜினியரிங் என மூன்று துறைகளுக்கான பாடப்பரப்பு கற்கைள் நடைபெறுகின்றன. 

கடந்த மூன்றாண்டு காலமாக மிக அமைதியாக நடைபெற்று வந்த இப் பீடத்தின் மாணவர்கள் மத்தியில் மிக அண்மைக்காலமாக சிறுசிறு சலசலப்புக்கள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது வகுப்பு பகிஷ்கரிப்பு ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெருகின்றது. மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து இன்னும் எவ்வித முன்னறிவிப்புக்களோ, எழுத்து மூல ஆவணங்களோ தனக்குக் கிடைக்கவில்லை என்று பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 1ம் திகதி நண்பகல் வேளையில் மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் பொருட்டு பிரதேச ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு குறித்த விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதன்போது, பல்கலையின் பதிவாளர் எச். அப்துல் சத்தார், பொறியியல் பீடத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உள்ளக தர நிர்ணயப் பணிப்பாளர் கலாநிதி பாலசூரிய உட்பட இன்னும் சில விரிவுரையாளர்களும், கல்வியியலாளர்களும் கலந்து கொண்டனர். 

அதிகாரிகளின் விளக்கவுரைகளுக் கிடையே ஊடகவியலாளர்கள் மாணவர்களின் பிரச்சினைகள் எதனடிப்படையில் நடைபெறுகின்றன. அவர்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் என்ன. அவை வாய்மூலமானதா, அல்லது எழுத்தாவண மூலமா என்ற கேள்விகளை அதிகாரிகள் பக்கம் ஊடகவியலாளர்கள் திருப்பிக் கேட்டபோது, 

மாணவர்கள் இதுவரை எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்காத போதிலும் அவர்கள் சமூக வலைத்தளங் களிலும், முக நூல் பதிவுகளிலும் சில பதிவேற்றங்களை மேற்கொண்டுள்ளனர் என்ற தகவல்களை எம்மால் யூகிக்க முடிகின்றது. 

அதன்படி, இப்பல்கலைக்கழகம் பொறியியல் பீட கற்கை நெறிக்குப் பொருத்தமில்லை என்றும் சிறந்த முகாமைத்துவம் இல்லை என்றும் சிறந்த விரிவுரையாளர்கள் இல்லை என்றும், வார இறுதி நாட்களில் வருகைதரு விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் வகுப்புக்கள் சுமையாக உள்ளதாகவும் தங்குமிடம் திருப்தியில்லை என்றும் பல்வேறு அநாமதேய குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழத்தின் மீது சுமத்துகின்றனர். 

தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மாணவ சமூகம் இளம் பராய நிலை யிலிருந்து குற்றங்குறைகளைக் கூறினாலும் அவர்களின் வளமான எதிர்கால நலன் கருதி பல்கலைக்கழக முகாமைத்துவம் எவ்வித எதிர் நடவடிக்கைகளையும் அவர்கள் மீது திணிக்காமல் மாயை நிலையிலிருந்து அவர்கள் தரப்பால் கூறப்படும் விடயங்களிலும் எம்மளவில் அல்லது வளப்பங்கீட்டு வகிபாகத்தில் குறைகள் இருந்தால் அதை நிவர்த்திப்பதற்கு உயர் கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் போதிய பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

பொறியியற் பீடத்தை ஆரம்பித்த போது அவை முகங்கொடுத்த பிரச்சினைகள் எம்மை விட அதிகமானவை. 2013ம் ஆண்டில் பொறியியல் பீடத்தை ஆரம்பித்ததிலிருந்து மிக விரைவான பெளதீகவள, பொறியியற் கருவிகள், நூல்கள் ஆய்வு கூடங்கள் வகுப்பறைக் கூடங்கள் என்ன பெரும்பாலான வசதிகள் எம்மிடம் உள்ளன. பொறியியற் பீடத்தின் ஆளணியை பொறுத்தமட்டில் நிரந்தரமான விரிவுரையாளர்களில் 03 பேர் கலாநிதிகளாகவும், 03 பேர் முது மாணிகளாகவும், 09 பேர் மேற்படிப்பு நிலையிலுள்ள விரிவுரையாளர்களாகவும் இருக்கும் நிலையில் பேராதனை, மொரட்டுவ, றுஹுணு பல்கலைக்கழங்களில் இருந்து 12 விரிவுரையாளர்கள் தற்காலிகமாகப் பணியாற்றுவதுடன், வருகை தரும் விரிவுரையாளர்களாக 15 தொடக்கம் 20 பேர் விரிவுரைகளை மேற்கொள்கின்றனர். 

மேலும் பொறியியற் பீடத்தல் 33, கல்வி சாரா ஊழியர்களும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் குறைபாடாகக் கூறும் போதிலும் விரிவுரையாளர்கள் இல்லை என்ற கூற்றில் உண்மை இல்லாமலுமில்லை. அதற்குக் காரணம் நாட்டில் இத்துறைசார் கல்விமான்கள் பெருமளவு இருந்த போதிலும் அதிகரித்து வரும் மாணவர் பரம்பரையின் தேவைக்கு ஏற்றவாறு நிரம்பல் செய்யக்கூடிய விரிவுரையாளர்கள் இல்லை என்பது கசப்பான உண்மை. எனவேதான் முன் சொன்ன ஏனைய பல்கலைக்ககைங்களில் பணி புரியும் துறைசார் விரி வுரையாளர்களை இங்கு வருகை தரும் (Visiting lectures) விரிவுரையாளர்களாக வைத்துக்கொண்டு அவர்களின் மனமுவந்த சேவையைப் பெற்றுக் கொள்கின்றோம். 

ஏனைய பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் வருகை விரிவுரையாளர்கள் தாங்கள் பணியாற்றும் பல்கலைக்கழகங்களில் எமக்காக சில கால நேரங்களை ஒதுக்கிக் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் போன்ற நாட்களில் இங்கு வந்து வகுப்புக்களை நடாத்துகின்றனர். மேலும் ஏனைய நாட்களில் இங்குள்ள நிரந்தர விரிவுரையாளர்கள் மாணவர்களின் செயலாக்கத்துக்கு ஏற்ற வகையில் தமது பணிகளைச் செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலைமை விரைவில் மாறக் கூடியது. 

விரைவாக நிலைமைகளைச் சீர் செய்வதற்கும் நாம் முன்னின்று உழைத்து வருகின்றோம் என்று பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் வலியுறுத்திக் கூறுவதுடன், பெளதீக வளங்கள் தொடர்பாகவும் சில குறிப்புகளை முன்வைத்தார். 

seusl

தற்போதுள்ள 6500 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட கட்டிடத் தொகுதி இருக்கின்ற போதும் மேலதிகமாக 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்மிடம் கையளிக்கத்தக்கதான 5000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு முடியும் தறுவாயில் வெளிநாட்டு நிதி உட்பாய்ச்சலின் மூலம் (சுமார் 263 மில்லியன் குவைத் நிதி) இரண்டாம் கட்டமாகவும் மேற்படி நாட்டிலிருந்து கிடைக்கப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிதி மூலம் 7200 ச.மீ கொண்ட கட்டிடத் தொகுதியும் எமக்குக் கிடைக்கவுள்ளது. 

மேலும் முதல் இரண்டு வருட மாணவர்களின் ஆய்வுகூடத்துக்கான வசதி வாய்ப்புக்கள், ஏனைய இருவருட மாணவர்களுக்கான ஆய்வுகூட விடயங்களுக்காக 2014இல் 250 மில்லியனும், 2015இல் 65 மில்லியனும் உயர் கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்துக்கான பாடவிதான தயாரிப்புக்களுக்காக பேராதனை, மொரட்டுவ, ருஹுண பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்ட குழு இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

அதில் முக்கியமான துறை சார்ந்த 05 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக பல்கலையின் கவுன்ஸிலர் குழு முழு அனுமதியையும் வழங்கி உள்ளது. 

இன்னுமொரு முக்கிய விடயம் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இப்பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்து விரிவுரைகளை நடாத்த முன்வரும் விரிவுரையாளர்களுக்கு 150,000/= ரூபாவை அலவன்சாக வழங்கவும் முன்வந்துள்ளது. அந்த வகையில் டிசம்பரிலிருந்து இருவர் இத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் மூவர் 2016 ஜனவரி முதல் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளமை மாணவர்களுக்குக் கிடைக்கவுள்ள வரப்பிரசாதமாகும். 

ஏனைய பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்களுக்கு வழங்கும் கல்வியோடு கூடிய நேரடி பயிற்சி நெறிகளுக்கு வழங்கும் அத்தனை நடைமுறைகளையும் தென் கிழக்குப் பல்கலைக்கழகமும் பின்பற்றி வருகின்றது.

இதன்படி இரண்டு வருட கற்கை நெறியின் பின்னர் 03 மாதங்கள் நேரடி பயிற்சிகளைப் பெறுவதற்காக (NBaita) நைற்றா நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் RDA, CEB, CECB, SLPA, SLT போன்ற நிறு வனங்களூடாக பயிற்சிகள் பொருத்தமான இடங்களில் வழங்கப்படுகின்றன. இது 3ம் வருட மாணவர்களுக் கும் பொருந்துவதாக அமையும். 

தென்கிழக்குப்பல்கலைக் கழகம் வழங்கும் எல்லாக் கற்கை நெறிகளுக்குமான பட்டச் சான்றிதழ்கள் முதுமைப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழுக்குச் சமனானதாகும். பொது இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ் என்ற அடைமொழியே வழங்கப் படுகின்றன.

மாணவச் செல்வங்கள் எதிர்கால தொழில்துறை விற்பன்னர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முதலிரண்டு வருட கற்கை நெறிகளுக்கான உசாத்துணை நூல்கள் போதியளவாகவும் மூன்றாம் வருட கற்கை நெறிகளுக்கும் தேவையான நூல்கள் சுமார் நான்காயிரம் கைவசமுள்ளன. மேலும் தேவையான நூல்களைக் கொள்வனவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 05 மில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளது. கொள்வனவுகள் தொடர்பான விதிமுறைகள் சட்டதிட்டங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக் கப்படும்போது ஓரிரு வாரங்கள் தாமதமடையலாம்.

கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் நாலா பக்கத்திலுமிருந்து 14 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் பொறியியற்பீடத்தில் கண்பட்டது என்னவோ கடந்த ஒரு சில வாரங்களாக தளம்பல் நிலை காணப்படுகின்றது. 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள சட்ட ரீதியான அமைப்புக்களும், அவ்வாறல்லாதவைகளும் சாதாரணமாக மாணவர்களை மையப்படுத்தி அல்லது வசப்படுத்தி தமது மேலாண்மையை நிலை நாட்ட முற்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை காலத்துக்குக் காலம் உசுப்பி விடுபவர்கள் ஆடிக் காற்றில் பழுத்து விழும் இலைகளைப் போன்று பிரயோசனமற்ற பலாபலன்களை அடைகின்றனர். ஏனென்றால் மீண்டும் அந்த மரங்கள் துளிர்விடத் தொடங்கி விடும். இணக்கப்பாட்டில் மலர்கின்ற உள்ளங்களின் உணர்வுகள் ஒன்றிணைந்து நல்லதொரு முடிவை எட்ட வேண்டும் என்பதே எங்களது அவாவாகும்.

 

கலாபூஷணம்
கலை இலக்கிய வித்தகர்
மீரா. எஸ். இஸ்ஸடீன்

நன்றி  – தினகரன் 06.12.2015