நிறைவேற்று அதிகாரம் இல்லாத சிறுபான்மையினரின் எதிர்காலம்!

 

images

கல்யாண வீடெங்கும் நிரம்பியிருக்கும் சந்தோசத்தில் திளைத்திருக்கும் வேளையில் யாருமறியா வண்ணம் கையிலிருந்த தங்க மோதிரம் நழுவி விழுவது மாதிரி, நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு விட்டது என்ற புளகாங்கிதத்தில் இருந்து சிறுபான்மை சமூகங்கள் இன்னும் வெளியில் வராத நிலையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஓரிரு தீர்மானங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய சவாலை தோற்றுவிக்குமோ என்ற மனத்தாங்கல் குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

 

பொதுவாக சிறுபான்மை கட்சிகளும் அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும் நாளாந்த அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன. நீண்டகால திட்டங்கள், தூரநோக்கான செயற்பாடுகள் என்று எதனையும் காண முடிவதில்லை. அது எப்படி என்றால், நாட் சம்பளத்திற்கு வேலைக்கு போகின்ற ஒரு கூலித் தொழிலாளி ஒவ்வொரு நாளின் வரவு செலவுகளையும் தனித்தனியே திட்டமிடுகின்றார். அன்றன்றைக்குரிய செலவுக்கு பணம் தேடுகின்றார். அந்தி சாயும்போது அவரது கணக்கு சமப்படுகின்றது. காசுப் பை காலியாகின்றது. இவ்வாறே சிறுபான்மை அரசியல்வாதிகள் ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான வேலைகளிலேயே கவனம் செலுத்துகின்றனர். இது முஸ்லிம் அரசியலின் விஷேட இயல்பாக இருக்கின்றது.

 

இந்த இலட்சணத்தில் முற்று முழுதாக தம்முடைய அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் நம்பிக் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் வாழாவிருக்குமாக இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதங்கள் இல்லை. அந்த வகையில், இலங்கையின் நடப்பு அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்களால் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகும். இனிவரும் காலத்தில் தொகுதிவாரி முறைமையை முதன்மையாகக் கொண்டமைந்த ஒரு கலப்பு முறையில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

 

அதிகாரத்தை சுகித்தல் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைய அறிமுகப்படுத்தினார். அதற்குப் பின்வந்த ஜனாதிபதிகள் எல்லோரும் அதன் உயர்ந்தபட்ச வரப்பிரசாதத்தை சுகித்தனர். சந்திரிக்கா அம்மையார் மட்டும் சில மாற்றங்களை கொண்டு வந்தார். என்றாலும் தான் பதவியேற்று 1 வருடத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பேன் என்று கூறி ஜனாதிபதியாகிய சந்திரிக்கா குமாரதுங்க, 11 வருடங்ககள் அதனை முழுமையாக அனுபவித்துவிட்டே ஜனாதிபதி ஆசனத்தில் இருந்து கீழே இறங்கினார். அதற்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவரது ஆட்சிக்காலம் எல்லா விதத்திலும் சரித்திரக் குறிப்புக்களில் தடித்த எழுத்துக்களால் எழுதப்பட்டது என்பதை மறுக்கவியலாது.

 

மஹிந்த தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் மக்களை யுத்தவெற்றியின் பக்கம் பராக்குகாட்டிவிட்டு, தன்னுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்தார். அநேகமாக மன்னராட்சி இடம்பெறும் அரபுலக ஆட்சியாளர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணிய அவர், ஜனநாயக ஆட்சி கட்டமைப்பு ஒன்றிற்குள் நிழல் மன்னராட்சி ஒன்றைப் போல நீண்டகாலம் ஆட்சி செய்ய வேண்டுமென்று பேராசைப்பட்டார். தான் மிகக்கிட்டிய காலத்தில் தோற்கடிக்கப்பட போவதில்லை என்றும் இன்னும் பல வருடங்களுக்கு தானே ஜனாதிபதியாக இருப்பேன் என்றும் அவர் திடமாக நம்பினார். நிலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் செய்திருந்த வேலைத்திட்டங்கள் பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்த போது, மஹிந்த எப்படியான கனவுடன் இருந்தார் என்பதும் நிரூபணமாயிற்று.
மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர்களது கிளை உறவுக்காரர்களையும் அதிகாரங்களில் அமர்த்தினார். இது கிட்டத்தட்ட மன்னராட்சி நிலவும் நாடுகளின் கட்டமைப்புக்கு ஒப்பானதாகும்.

அதுமட்டுமன்றி, அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகள், இனவாதம் என்பவை எல்லாம் வயிறுபுடைக்க வளர்ந்திருந்தன. இவற்றுக்கெல்லாம் அவரிடம் இருந்த நிறைவேற்று அதிகாரம் என்ற பலமே மிக முக்கிய காரணமாக இருந்தது எனலாம். ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் வேலை தவிர மற்றெல்லா காரியங்களையும் சாதிக்கக் கூடியது’ என்று நிறைவேற்றதிகாரம் வர்ணிக்கப்பட்டாலும் அதனை நிஜத்தில் செய்து காட்டியவர் மஹிந்தவே. ஆனால் ஒரு கட்டத்தில் மக்களுக்கு தெளிவு பிறந்தது. யுத்தவெற்றி, அபிவிருத்தி என எத்தனையோ சாதனைகளை எல்லாம் நிகழ்த்தியிருந்தாலும் அதை மக்களுக்கு காட்டி, மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை வந்தது. அப்புள்ளியில் மஹிந்த தோற்றுப்போனார்.
மைத்திரிபால சிறிசேன வென்றதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீதான கடும் வெறுப்பே அடிப்படை காரணமாக இருந்தது என்றால், மஹிந்தவின் தோல்விக்கு நிறைவேற்றதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊழல், குடும்ப ஆட்சி, இனவாதம் போன்றவற்றுக்கு வித்திட்டதே காரணமாக அமைந்தது எனலாம். அதாவது நிறைவேற்றதிகாரம் இல்லாத ஒரு ஜனாதிபதியாக அவர் இருந்திருந்தால், பாராளுமன்றம் நினைத்திருந்தால் மஹிந்தவை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பது பரவலாக உணரப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கம் வெற்றிவாகை சூடியது.

 

ஆரம்பத்திலிருந்தே தான் சொன்னதைச் செய்யும் ஒரு ஆட்சியாளர் என்பதை மைத்திரிபால சிறிசேன நிரூபித்து வந்தார். முன்னதாக ஜனாதிபதியாக பதவிவகித்த மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது திருத்தத்தை மேற்கொண்டு தனது ஆட்சிக் காலத்தை அதிகரித்துக் கொண்ட ஒரு நாட்டில், அதற்கு பின்னர் ஆட்சி பீடமேறிய மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பதவி கையில் இருக்கும் போதே, அதிகாரத்தை குறைப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் முன்வந்ததை உலகமே வினோதமாக நோக்கியது. அதன் தொடர்ச்சியாக 19ஆம் திருத்தத்தின் கீழ் வரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை அவர் மீதான நன்மதிப்பை மேலும் அதிகரித்தது.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு விட்டன. ஆயினும் தற்போதிருக்கின்ற ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் முடிவடைகின்ற வேளையிலேயே நிறைவேற்றதிகாரமும் காலாவதியாகும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட கையோடு நிறைவேற்று அதிகாரமில்லா ஜனாதிபதி முறைமையும் அறிமுகப்படுத்தப்படப் போகின்றது போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தென்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் பதவிக்கால முடிவிலேயே அது நடைமுறைக்கு வரும் என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணங்கள் இருக்கலாம். சட்ட ரீதியான காரணங்களைக் காட்டிலும் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைமையை சமாளிப்பதற்கு நிறைவேற்று அதிகாரம் கொஞ்சமாவது மீதமிருப்பது நல்லதென அரசாங்கம் கருதியும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கணிசமான பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில காலத்தில் இந்த ஜனாதிபதி முறைமை முற்றாக செயலிழந்து போய்விடும்.

 

உண்மையான பக்கம்

இவ்வாறான பின்னணியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பான கருத்தாடல்கள் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்திற்கு வந்திருக்கின்றன. நாட்டில் முக்கால் வாசிப்பேர் அல்லது அதற்கும் அதிகமானோர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நடவடிக்கையை வரவேற்கின்றனர். இது பற்றிய போதிய தெளிவு சாமான்ய மக்களுக்கு இல்லை என்பதே உண்மை என்றாலும் ‘ஏதோ நல்லது நடக்கின்றது’ என்ற எண்ணத்தில், மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் நிறைவேற்றதிகார ஒழிப்பு நடவடிக்கை குறித்து சந்தோசமடைகின்றனர். தமது வாக்குகள் வீண்போகவில்லை என்று அவர்கள் எண்ணுகின்றனர். இது உண்மையிலேயே பேதங்கள் கடந்து பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால், நிறைவேற்றதிகாரம் இல்லாது போய்விட்ட ஒரு நாட்டில் சிறுபான்மை மக்களின் அரசியல், சமூக எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று சிந்திப்பது இப்போது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

 

நிறைவேற்றதிகாரம் என்பது, நாம் எல்லாம் அறிந்து வைத்திருப்பது போல மிக மோசமான ஒன்றல்ல என்பதை முதலில் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இருப்பினும், கடந்த 35 வருடங்களாக அப்பதவியை வகித்த ஜனாதிபதிகள், இந்த அதிகாரத்தை நமக்கு மோசமானதாக சித்திரித்துக் காட்டியிருக்கின்றார்கள் என்பதே நிஜம். அவர்கள் நல்ல வேலைகளுக்காக இவ்வதிகாரத்தை பயன்படுத்தியதை விடவும், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அசுர காரியங்களை செய்து முடிப்பதற்காக இதனைப் பாவித்த சந்தர்ப்பங்களே அதிகம். இதன் காரணமாக நமக்கு நிறைவேற்றதிகாரம் மீதே ஒரு வெறுப்பு ஏற்பட்டுப் போயிற்று. அது இல்லை என்றால் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்ந்துவிடும் என்று கருதுகின்றோம்.
உண்மையாகவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை என்பது சிறுபான்மை மக்களுக்கு ஒரு காப்பீடு போன்றது என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதியிடம் உயர் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, ஜனாதிபதி நினைத்தால் சிறுபான்மை மக்களுக்காக ஏதேனும் நற்காரியங்களை செய்ய முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்று அதிகாரம் என்பது சிறுபான்மையினருக்கு சார்பான தீர்மானங்களுக்காக பாவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும்.

 

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்காக பிரேதமாசாவோ, டீ.பி. விஜயதுங்கவோ, சந்திரிகாவோ, மஹிந்தவோ நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் மூன்று தசாப்தங்களாக அவ்வதிகாரம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் பொருட்டு பாவிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதுபோல, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக சீறிப்பாய்ந்த இனவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த அதிகாரம் உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாகவே இன்று அவ்வாறான ஆட்சி முறையில் சிறுபான்மையினர் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். அது மாற்றப்படுவதையும் சாதகமாக நோக்குகின்றனர்.

 

இது இவ்வாறிருக்க, நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவதால் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படக் கூடிய சவால்கள் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் நமது அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெரிதாக கணக்கெடுக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமது எதிர்காலம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மக்களும் அவர்களுக்காக அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்கின்ற அரசியல்வாதிகளும் இதிலிருக்கின்ற நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

 

சிந்திக்க வேண்டியது

இது சிங்கள நாடு இல்லை என்றும் இது எல்லா இனத்தவர்களுக்கும் பொதுவான நாடு என்றும் மயிர் கூச்செறியும் வார்த்தைப் பிரயோகங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, நிஜத்தில் இது சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்ற நிலைப்பாட்டில் இன்னும் மாற்றமில்லை. சிறுபான்மையினரை பெரும்பான்மை சமூகங்களாக மாற்றியமைக்கக் கூடியதான அபூர்வங்கள் எதுவும் நடந்துவிடப் போவதும் இல்லை.

 

இவ்வாறிருக்கையில், இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு எப்போதாவது ஒருநாள் நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதி முறைமை அமுலுக்கு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்;கவும் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. யார் ஆட்சி செய்தாலும், சிறுபான்மையினருக்கு சாதகமான ஒரு திட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுகின்ற போது, பாராளுமன்றத்தினால் அதை தோற்கடிக்க முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில், அதை ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பினாலும் நிறைவேற்ற முடியாது. எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் சிங்கள எம்.பி.க்களே பாராளுமன்றத்தில் அதிகமாக அங்கம் வகிப்பர் என்பதால் இந்நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. ஆனால், இனிவரும் காலத்தில் இனவாத சிந்தனையற்ற அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் அற்புதங்கள் நடப்பதற்கும் இடமுள்ளது.

 

நிறைவேற்று அதிகாரம் இல்லாது செய்யப்படுவதால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான சவாலே மேற்சொன்ன விடயம். அதேநேரம் இதைவிடவும் சிறப்பான பல வரப்பிரசாதங்களையும் சாதக நிலைமைகளையும் இந்த மாற்றம் கொண்டு வரலாம் என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. அந்த நம்பிக்கையிலேயே தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் திட்டங்களை மறுகேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கின்றனர்.

 

எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு பொது மகனும் தம்முடைய அரசியல் எதிர்காலம், பல்லின சமூகங்கள் வாழும் நாட்டிலான வருங்கால இருப்பு என்பவை தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்காக, நிறைவேற்று அதிகார ஒழிப்பை எதிர்ப்பது என்று அர்த்தப்படாது. மாறாக, நிறைவேற்றதிகாரம் இல்லாத ஒரு தேசத்தில் வாழ்வதற்கான சவால்களுக்கு முன்கூட்டி தயாராதல் அவசியமாகின்றது. எப்படியோ நிறைவேற்று அதிகாரம் அற்ற ஒரு தேசத்தில் நாமும் நமது தலைமுறையும் வாழப் போகின்றோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, செயலாற்ற வேண்டியிருக்கின்றது.

 

தம்முடைய அரசியல் எதிர்காலத்தை கட்சிகளும் அரசியல்வாதிகளும் பார்த்துக் கொள்வார்கள் என்று தமிழர்களும் முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருப்பது போல தெரிகின்றது. இது ஒரு கண்மூடித்தனமான சிந்தனையாகும். உயர்ந்த எழுத்தறிவு வீதத்தைக் கொண்ட நாடொன்றில் வாக்காளர்களும் குறிப்பாக கட்சிகளின் ஆதரவாளர்கள் நேர்ந்துவிடப்பட்ட கோழிகளைப் போல இருப்பது ஆரோக்கிமானதல்ல. அரசியல்வாதிகளுக்கு அப்பால் மக்களும் தங்களுடைய எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறான சிந்தனையோடு உருவாகும் ஓரிரு சமூக இயக்கங்களும் நடுநிலைப் போக்கிலிருந்து விலகி, கட்சி அரசியலுக்குள் விழுந்து நாறிப்போகின்ற நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் என்பது முஸ்லிம் காங்கிரஸினதோ, மக்கள் காங்கிரஸினதோ, தேசிய காங்கிரஸினதோ அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளதோ அரசியலுமல்ல, எதிர்காலமும் அல்ல. இன்றைய முஸ்லிம் அரசியலை இவர்கள் எல்லோரும் தமக்கிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே யதார்த்தம். இது தமிழர்களின் அரசியலுக்கும் பொருந்தும். இந்த ஒவ்வொரு கட்சியும் தம்முடைய எதிர்காலம் பற்றியே பெரும்பாலும் சிந்திக்கின்றது. இன்னும் 10 வருடத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினையை அப்போதிருக்கும் கட்சி அல்லது அரசியல்வாதி பார்த்துக் கொள்வார் என்றே முஸ்லிம் அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, அவர்கள் மீது பாராத்தைப் போட்டுவிட்டு மக்கள் சும்மா இருக்க முடியாது.
தங்கம் விலை குறைந்திருக்கின்றது தானே, மோதிரம் போனால் வளையல் வாங்கலாம் என்று நினைத்துக் கொள்வது போல, எதிர்கால அரசியல் சூழலுக்கு தம்மை தயார்படுத்தாமல் ஒரு சமூகம் இருக்குமென்றால். அந்த சமூகம் இன்னும் நூறுவருடங்களுக்கு பிறகு விரல்களையும் இழக்க நேரிடலாம்.

• ஏ.எல்.நிப்றாஸ்

(வீரகேசரி 05.12.2015)

nifras