அக்கரைப்பற்று மத்திய குழு தொடர்பில் மு.கா.தலைவர் றஊப் ஹக்கீம் அதிரடி முடிவு!

 

 

 

றியாஸ் இஸ்மாயில் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் ஏற்பாட்டாளராக யூ.எல். ஆரிபீன் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

SLMC

மத்திய குழு கலைக்கப்பட்டு மிக நீண்ட காலமாக செயற்படாது இருக்கின்ற விடயத்தையும், புதிய மத்திய குழுவை அமைப்பதில் அமைப்பாளர் ஹனிபா மதனி அவர்கள் காட்டி வரும் அசட்டையையும்,கடந்த 02.12.2015 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடந்த சந்திப்பின் போது தலைவரின் நேரடிக்கவனத்திற்கு அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் கொண்டு வந்ததையடுத்தே,நகர திட்டமிடல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றஊப் ஹக்கீம் இவ்வறிவிப்பை செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களின் மத்திய குழுக்கள் கலைக்கப்பட்டு, புதிய குழுக்களை அமைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அக்கரைப்பற்றுப் பிரதேச மத்திய குழுவும் அவ்வாறு கலைக்கப்பட்டு, அதனை அமைப்பதற்கு ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இக்குழுவுக்கு தலைமை தங்கிய அமைப்பாளர் ஹனிபா மதனி அவர்கள் இதுவரை காலமும் புதிய மத்திய குழு அமைக்கும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

அக்கரைப்பற்றில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளரும், மாகாண சபை உறுப்பினருமானஏ.எல்.தவம் அவர்களின் வேகமான இடைவிடாத செயற்பாடுகளினால், கட்சிக்கு அங்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் பாரிய ஆதரவுக்கு இடமளிக்கப்படும் வண்ணம்  மத்திய குழு விஸ்தரிக்கப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட  வேண்டுமென பல முக்கியஸ்தர்கள் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்ததையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளராக நியமிக்கப்பட்டிருக்கும் யூ.எல்.ஆரிபீன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால அங்கத்தவராவார். ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் தற்போதைய தலைவருக்கும் மிக விசுவாசமானவர். இவரை ஏற்பாட்டாளராக நியமித்ததினூடாக மத்திய குழு புனரமைப்பும், அதற்குப் பின்னரான செயற்பாடுகளும் இவரின் கண்காணிப்பிலேயே சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறியக் கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இம்முடிவினை அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் பாராட்டியுள்ளதோடு, எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தமது மண்ணில் பலம்பெறுமெனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.