மு.கா மாற்றத்தை நோக்கிப் பயனிக்கின்றதா..?? (பகுதி 2)

மு.கா மாற்றத்தை நோக்கிப் பயனிக்கின்றதா..??

 

நேற்றைய தொடர்ச்சி…..

slmc rauff hakeem hasan ali basheer

 

குறைந்த பட்சம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை மையப்படுத்தியாவது  கிழக்கு மாகாணத்தில் 26வது பேராளர் மாநாட்டினை ஏற்பாடு செய்திருக்கலாம்.அதனையும் மு.கா செய்யவில்லை.கடந்த 26வது பேராளர் மாநாடு கண்டியில் நடாத்தப்பட்டமைக்கும் ஒரு கதை உள்ளது.இதனை கிழக்கு மாகாணத்தில் நடாத்தி இருந்தால் சில வேளை பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்குமாம்.மு.கா அவசர அவசரமாக இவ் மாநாட்டினை நடாத்தியது செயலாளர் மூலம் தனக்கு ஏற்படப் போதும் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது பலரினதும் வாய்களில் சிலாகிக்கப்படும் இன்றைய கதைகளில் ஒன்றாகும்.தற்போதைய அரசியல் அரங்கில் செயலாளர்களின் ஆதிக்கங்கள் கட்சிகளிடையே பெரிதும் வலுத்து வருகின்றன.இதனை மு.கா தலைவரும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இப் பேராளர் மாநாடு எனலாம்.பொதுச் செயலாளரான ஹசன் அலியின் முக்கிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக  பிரதிப் பதிவாளரான மன்சூர் ஏ.காதருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை சற்று தேசியப்பட்டியலுடன் தொடர்புபடுத்தி  நோக்கினால் ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுவதற்கான சைகைகள் குறைவடைந்து செல்லுவதனை அறிந்து கொள்ளலாம்.இதன் பிற்பாடு ஹசன் அலியின் விஷப் பல் பிடுங்கப்பட்டுள்ளது போன்ற மிகக் கேவலமான விமர்சனங்களுக்கு ஹசன் அலி உள்ளாகியுள்ளார்.இது சிலருக்கு மகிழ்வினைக் கொடுக்கலாம்.ஹசன் அலி மு.காவிற்கு எதிராக விஷத்தினை கக்கிய ஒரு சந்தர்ப்பத்தினைக் கூட யாராலும் குறிப்பிட்டுக் கூற முடியாது.இப்படியான ஒருவரினை நையப்புடைய வைத்த மு.காவின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது.அக் குறித்த நிகழ்வுக்கு கூட ஹசன் அலி தாமதமாகத் தான் சமூகம் அளித்திருந்தாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஒரு கட்சியின் யாப்பு மாற்றம் என்பது மிக முக்கியமான விடயமாகும்.இது மூடிய அறைக்குள் ஓரிரு நபர்களுக்குள் முடிக்கும் ஒரு விடயம் அல்ல.இவ் யாப்பு மாற்றங்கள் பற்றி உயர்பீட உறுப்பினர்கள் கூட சரியான விதத்தில் அறிந்திருக்கவில்லை என்பது அமைச்சர் ஹக்கீம் தனது விருப்பப்படி கட்சியினை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதனை தெளிவாக புடம் போட்டுக் காட்டுகிறது.இப் பதவிகள் வழங்கப்பட்ட பின்பு கூட மு.காவின் முக்கியஸ்தர்கள் பலரிற்கு பதவி கூட்டுக் குறைப்பு பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை.இவ் யாப்பு மாற்றம் பற்றி உரிய விதத்தில் அறிந்த மு.காவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சர் ஹக்கீமின் இச் செயற்பாட்டினை கடிந்து கொண்டனர்.அந்த பேராளர் மாநாட்டில் இருந்தவாறே சில ஊடகங்களுக்குப் பின்னால் முக்காட்டினை போட்டுக் கொண்டு தங்களது கடுமையான விமர்சனத்தினை முன் வைத்திருந்தனர்.மசூறா அடிப்படையில் வாசிக்கப்படும் மகுடிக்குத் தான் தாங்கள் படம் எடுத்து ஆடுவோம் என இனியும் மு.காவினால் கதைக்க முடியாது என்பதே உண்மை.

 

அண்மைக் காலமாக ஹசன் அலியினை அமைச்சர் ஹக்கீம் புறக்கணிக்கின்றாரா? என்ற வினா அடிக்கடி எழுகிறது.தேசியப் பட்டியலில் ஹசன் அலியின் பெயரினை உள்ளடக்கிவிட்டு பிரச்சார மேடைகளில் ஒரு ஊரில் இரண்டு எம்.பிகள் இருப்பதாக எழுப்பப்படும் விமர்சனங்களினை தான் அறியாமல் இல்லை என ஹசன் அலியினை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார். 26வது பேராளர் மாநாட்டில் வழங்கப்பட்ட பதவிகளிலும் ஹசன் அலியின் பதவியே  குறி வைத்துக் குறைக்கப்பட்டுள்ளது.ஹசன் அலிக்கு இம் முறை தேசியப் பட்டியல் வழங்காமல் விட்டாலும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியிலும் இதே அழுத்தம் அமைச்சர் ஹக்கீமிற்கு ஹசன் அலியினால் ஏற்படுத்தப்படும்.இவ்வாறான அழுத்தம் இனி ஏற்படுவதை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் ஹசன் அலியினை மு.காவினை விட்டும் ஓரம் கட்டுவதனைத் தவிர வேறு வழி இல்லை.பொதுச் செயலாளர் பதவியினைக் கொடுத்தாலே வாயைப் பொத்திக் கொண்டு சொல்லுவதற்கு தலையாட்ட பலரும் தயாராகவே உள்ளனர்.இதற்கான ஆரம்பப் படியாகவும் இப் பதவி குறைப்பினை நாம் நோக்கலாம்.

 

எந்தக் கட்சிக்கும் இல்லாத விசேடம் மு.காவிற்கு உண்டு.அது தான் நான்கு பிரதித் தலைவர்களும்,ஆறு செயலாளர்களும் உள்ளமையாகும்.இதில் சிரேஸ்ட தலைவர்,பொதுச் செயலாளர் வேறு.இது பதவி ஆசையின் விளைவினாலா? அல்லது பொறுப்புக்களினை பங்கு போட்டுக் கொண்டு திறம்படச் செய்வதற்கா? என்ற இரு வினாக்கள் எழுகிறது.பிரதித் தலைவர்கள் வரிசையில் உள்ளோர்கள் ஒரு பதவியினை வழங்கி கௌரவிக்க வேண்டியவர்கள்.ஆனால்,செயலாளர் பதவியில் உள்ளவர்களில் மன்சூர் ஏ.காதர் தவிர்ந்து மற்ற அனைவரும் மு.காவினால் வழங்கப்பட்ட சில பதவிகளினை ஆசை வைத்தது அடையமுடியாமல் போனவர்கள் எனலாம்.இதனை வைத்து சிந்திக்கும் போது தனக்கு இக் குறித்த பதவி கிடைக்கவில்லையே? என்ற மன ஆதங்கத்தில் கட்சியினை விட்டும் வேலி பாயும் மனங்களினை கட்டி வைக்கும் கயிறாக அமைச்சர் ஹக்கீம் இந்த செயலாளர் பதவியினை வழங்கியுள்ளார் எனலாம்.அலி ஷாஹிர் மௌலானாவிடம் மு.காவினால் வழங்கப்பட்ட பதவிகளில் ஏன் உங்களைப் புறக்கணித்துள்ளார்கள் என்ற வினாவினை ஊடகவியலார்கள் எழுப்பிய போது தான் பதவி வழங்கப்படாவிட்டாலும் மு.காவுடன் தொடர்ந்து இருப்பேன்.மற்றவர்கள் அவ்வாறல்ல என்ற பதிலினை அளித்திருந்தார்.இவரின் இக் கூற்று இவ் விடயத்தினை இன்னும் தெளிவாக நிறுவுகிறது.

 

மன்சூர் ஏ.காதர் மு.காவின் வளர்ச்சிக்காக அஷ்ரப் காலம் தொட்டு உழைக்கும் ஒருவர்.சம்மாந்துறையில் மன்சூரின் அரசியலினை அவர் தனிப்பட்ட முறையில் பொருந்திக்கொள்ளாத போதும் மு.கா மீது கொண்ட பற்றினால் மு.காவின் வளர்ச்சிக்காக மாத்திரம் மன்சூரினை ஆதரித்த ஒருவர்.அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்ற அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் இதனை திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரே கூறி அவரின் கட்சிப்  பற்றினை விளக்கி இருந்தார்.மன்சூர் ஏ.காதர் மு.காவிற்கு சார்பாக செயற்பட்டமையினால் தனது தனிப்பட்ட பதவிகளில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.எனவே,இவருக்கு மு.கா உயர்பதவி ஒன்றினை வழங்கி கௌரவிக்க வேண்டியது அவசியம் எனலாம்.மேலும்,வழங்கப்பட்ட பதவிகளில் தலைமைக்கு அடுத்து ஒரு மிகப் பெரிய பதவியாக இவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியினைத் தான் குறிப்பிடலாம்.இப்படியானவருக்கு இதற்கு முன்பு சொல்லும் அளவு பதவிகள் வழங்கப்படவில்லை.அவரும் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை.கடந்த பாராளுமன்ற பிரச்சார மேடைகளில் சில சில்லறைகள் கூவித் திருந்த போதும் மக்களோடு மக்களாக ஒரு பார்வையாலாராகவே இவர் இருந்தார்.அவர் அடிக்கடி பதவிகளைத் தருபவன் அல்லாஹ் எனக் கூறுவார்.இப்படி பதவியாசை அற்ற ஒருவர் அப் பதவியினை அலங்கரிக்க மிகவும் தகுதியானவரும் கூட.

 

இளைஞர்கள் ஒரு கட்சியின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள்.மு.கா இளைஞர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை 26வது பேராளர் மாநாட்டினை ஏற்பாடு செய்ததிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.குறித்த பேராளர் மாநாடு நடாத்தப்பட்ட தினம் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.இளைஞர்கள் தேவை இல்லை என்பதற்கான மு.கா இத் தினத்தில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததா? அல்லது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலினை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா? இளைஞர்களினை புறக்கணித்த மு.காவின் அரசியல் வாகனம் அவ்வளவு தூரம் பயணிக்க மாட்டாது என்பது வெள்ளிமடையான ஒரு உண்மை.இளைஞர் பாராளுமன்றத் தேர்தலிலும் இவ் அரசு அதிகம் கவனம் செலுத்துவதாக அறிய முடிகிறது.சாய்ந்தமருது போன்ற இடங்களில் அ.இ.ம.காவின் மறைமுக ஆதரவுடன் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.இளைஞர்களை தங்களோடு இணைத்து பயணிக்க இத் தேர்தலினையும் கட்சிகள் திட்டமிட்டு பயன்படுத்தலாம்.மேலும்,சம்மாந்துறையில் களமிறங்கிய வேட்பாளர் அ.இ.ம.காவின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர்.இப்படி அ.இ.ம.கா இவ் விடயத்தில் தனது பூரண கழுகுப் பார்வையினைச் செலுத்தியுள்ளது.மு.காவினை மிதித்துக் கொண்டு அ.இ.ம.கா வளர்ச்சி காண்பதற்கு இவ்வாறான சிறு சிறு விடயங்களும் ஒரு காரணமாகும்.எனவே,மு.கா கட்சியினை வளர்ப்பதற்காக மேற்கொள்ளும் இவ்வாறான திட்டமிடல்கள் மு.காவின் அழிவுப் பாதைக்கே வழி காட்டுகிறது.மேலும்,இவ் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் கூட மனம் சுளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.சாப்பாடு பகிர்வு மிகவும் சிறுமைத் தனமாக நடைபெற்றதாம்.தலைவரும் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினாராம்.ஒரு மாநாட்டினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ய முடியாதவர்கள் ஒரு நாட்டின் முஸ்லிம் சமூகத்தினை  எப்படி சிறந்த முறையில் கையாளப்போகிறார்கள்?

 

இந் நிகழ்வின் போதுள்ள இன்னுமொரு மிக முக்கிய விடயம் தான் மரம் எனும் சஞ்சிகை வெளியிடப்போவதான கதை.தெஹிவளையில் இடம்பெற்ற மு.காவின் 24வது பேராளர் மாநாட்டில் மு.காவிற்கான இணைய தள அறிமுகம் ஒன்று இடம்பெற்றது.அந்த இணைய தளம் தற்போதும் உறங்கு நிலையிலேயே உள்ளது.இணைய தளத்தினை திறம்பட செய்ய முடியாதவர்களால் குறித்த சஞ்சிகை நிகழ்வினை திறம்படச் செய்ய முடியுமா? தாங்கள் முதற் திட்டமிடப்பட்டதை செய்ய முடியாதவர்கள் இதனை எவ்வாறு செய்யப்போகிறார்கள்? முதற் கோணல் முற்றும் கோணல் அல்லவா? என்ற வினாக்களினை எழுப்பி விடை பெற்றால் இவர்களின் சஞ்சிகை முயற்சி வெறும் வாய் வார்த்தைகளும் குறுகிய காலத்திற்குள் முடங்கும் ஒன்றும் என்பதை அறிந்து கொள்ளலாம்.மேலும்,இது போன்ற சஞ்சிகைகள் இலவசமாக விநியோகம்  செய்யப்படல் வேண்டும்.இது மக்களிடம் எந்தளவு சென்றடையப் போகிறது என்பதெல்லாம் கேள்விக் குறியினையே தோற்றுவிக்கின்றது.சுடச் சுட செய்திகளினைப் பரிமாறும் ருசி மாதாந்த சஞ்சிகைகளில் கிடைக்காது.ஒரு குறித்த விடயத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க அது பாரிய உதவியினைப் புரியும் என்பதி மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.எனவே,இவ்வாறான மாதாந்த சஞ்சிகை வெளியிவது பற்றி மு.கா கரிசனை கொள்ள முன்பு தங்கள் இணையதளத்தினை தகுந்த முறையில் இயக்க கரிசனை காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

 

மு.காவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் ஒரு விடயம் தான் இளைஞர்கள் விடயத்தில் மு.கா பராமுகமாக இருப்பதாகும்.எல்லா விடயத்திலும் அன்று இருந்தவர்களே இன்றும் உள்ளனர்.கேட்டால் நாங்கள் சிரேஸ்ட உறுப்பினர்கள் எனக் கூறுவார்கள்.அன்று மு.காவின் வளர்ச்சிக்காக இவர்கள் போராடியது மு.காவின் வளர்ச்சிக்கககவா? அல்லது பின்னால் கிடைக்கப்போகும் பதவிகளுக்காகவா? என்ற வினாக்களுக்குமான விடைகளினை இவ்வாறானவர்களின் இக் கூற்றுக்கள் புடை போட்டுக் காட்டும்.அண்மையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற மு.காவின் இளைஞர் மாநாடு மு.கா இளைஞர்களினை தனது கட்சிக்குள் உள் வாங்கும் ஒரு செயற்பாடாக கருதலாம்.இந்த நிகழ்வு இதற்கு முன்பு கடந்த தேர்தல் காலப்பகுதியில் சம்மாந்துறையில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மு.கா இரு இளைஞர் மாநாட்டினை நடாத்தி இருப்பதானது மு.கா தனது கட்சியினை இயக்க நிலைக்கு கொண்டு வர தீவிரமாக செயற்படுகிறது என்பதை காட்டுகிறது.

 

சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர் மாநாட்டினை மு.காவின் தேசிய இளைஞர் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு மு.காவின் ஆதரவாளர்கள்  அழைக்கப்பட்டிருந்தனர்.இவ் அழைப்பிதழில் மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.இதனை மு.கா போராளிகளாக தங்களைக் இணங்காட்டிக் கொண்டிருக்கும் மு.காவின் ஆதரவாளர்கள் பலர் பகிரங்கமாகவே கடிந்து கொண்டனர்.சாய்ந்தமருதில் இருந்து இலத்திரனியல் ஊடகங்களுக்கு மு.கா சார்ப்புக் கட்டுரைகள் மாத்திரம் வரையும் ஒரு மு.காவின் தீவிர ஆதரவாளர் இவ் விடயத்தில் மு.காவினை கடிந்து பகிரங்கமாக இலத்திரனியல் ஊடகங்களுக்கு எழுதி இருந்தார்.ஆரிப் சம்சுதீன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தான் மு.காவிற்குள் இணைந்து கொண்ட ஒருவர்.இவருக்கு எப்படி மு.காவின் இளைஞர் ஆதரவாளர்கள் தெரியப்போகிறார்கள்? அழைப்பிதல் கிடைக்காத பல மு.காவின் உண்மை ஆதரவாளர்கள் மனதளவில் மு.காவினை விட்டும் விலகியதையும் அவதானிக்க முடிந்தது.வளர்ச்சிக்காக செய்யும் ஒரு விடயம் வீழ்ச்சிக்கு அடித்தளம் இடுவது மிகவும் ஆபத்தானது.

 

ஆரிப் சம்சுதீன் ஹசன் அலியின் மீது கொண்ட குரோதத்தினை இந்த நிகழ்வின் அழைப்பிதழில் காட்டி இருந்தார் என்றே கூறத் தோன்றுகிறது.மு.காவில் உள்ள உயர் பதவிகளின் அடிப்படையில் தலைவர்,செயலாளர்,தவிசாளர் என பெயர்கள் ஒழுங்கு முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.ஹசன் அலியின் பெயரினை ஒரு மூலையில் வைத்தாப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தே சேர்த்திருந்தார்.செயலாளர் பதவியினை விட பாராளுமன்ற பதவியே பெரிதாகும் என்ற ஒரு விடயத்தினையும் இவ் அழைப்பிதல் சுட்டி நிற்கின்றது.ஏன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாவிட்டால் செயலாளர்ப் பதவியினை திறம்படச் செய்ய முடியாதா? என ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் வழங்கத் தேவை இல்லை என்பதற்கு பலரும் முன் வைக்கும் நியாயத்தினை இது கேள்விக்குற்படுத்துகிறது.பாராளுமன்றப் பதவி இல்லாவிட்டால் கட்சியின் சின்னப் பிள்ளையும் தன்னை மதிக்காது என்பதையும் இவ் விடயம் சுட்டிக் காட்டுகிறது.சொந்த விருப்பு வெறுப்புக்களினை பொது நிகழ்வுகளில் காட்டுவோர் அக் குறித்த பதவிக்குத் தகுதியானவர்களா? என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

 

இந் நிகழ்வில் அஷ்ரபினை நினைவூட்டும் முகமாக தலைவர் அஷ்ரப் நினைவு  நிகழ்வு என பெயர் சூட்டப்படிருந்தது.அஷ்ரபினை நினைவூட்ட இக் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பின் ஏன் அவரின் நினைவு தினமான அக் குறித்த தினத்தில் இவர்களால் நடாத்த முடியாது போய்விட்டது? நேரம் இல்லையா? அல்லது அஷ்ரப் மரணித்த தினம் குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு நினைவில் இல்லையா? அதாவது இளைஞர் மாநாடு நடாத்திய தினம் அஷ்ரபினை நினைவூட்டிக் கொண்டார்கள்.வேறு அஷ்ரபிற்காக அக் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யவில்லை.அதாவது இவர்களுக்கு அஷ்ரபினை விட கட்சி வளர்த்து பயன் பெறுவதுதான் முக்கியமானது.அஷ்ரபிற்காக எல்லாம் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்ய முடியாது.ஒரு நிகழ்வில் அஷ்ரபினை நினைவூட்டிக் கொள்வோம் என்பதே இதன் இன்னுமொரு பொருளும் கூட.

 

இந் நிகழ்விற்கு இப் பெயர் சூட்ட இன்னுமொரு காரணமும் உள்ளது.அஷ்ரப் நினைவு தினத்தினை மு.கா கட்சித் தலைமை ஒரு பெரிதாகவே கணக்கு எடுக்கவில்லை.அக் குறித்த தினத்தில் இலண்டன் சென்று தங்கள் குடும்பத்தோடு உணவுண்டு மகிழ்ந்த போட்டோக்கள் அக் குறித்த தினத்தில் வெளியிடப்பட்டிருந்தது.இது மு.காவின் சிரேஸ்ட உறுப்பினர்களிடத்தில் ஒரு மிகப் பெரிய அதிருப்தியினை ஏற்படுத்தி இருந்தது.மேலும்,அ.இ.ம.காவின் தலைவர் அக் குறித்த தினத்தில் அஷ்ரபினை நினைவூட்டி தனது கட்சியினை வளர்க்க அத் தினத்தினை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.அத் தினத்தில் அமைச்சர் றிஷாத் அஷ்ரப் நினைவு தின புலமைப்பரிசில் திட்டத்தினை அறிமுகம் செய்திருந்தார்.இச் செயல் அஷ்ரபினை உண்மையாக மதிக்கும் கட்சி அ.இ.ம.கா போன்றதொரு தோற்றப்பாடு எழுந்தது.இது மு.காவிற்கு பலத்த அவமானத்தினை தோற்றுவித்திருந்தது.இதனை இல்லாமல் செய்ய மு.கா இந் நிகழ்வினை ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மைஇந் நிகழ்வில் அஷ்ரபினை கௌரவிக்கும் முகமாக அஷ்ரப் நினைவு  விருது ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.இவ் விருது எதனை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது என்பதே இங்குள்ள மிக முக்கிய ஒரு வினாவாகும்.வீதியில் சென்றவனைப் பிடித்துக் கொடுத்தார்காளா? இதனை எல்லாம் எந்த மு.கா ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பியதாக இல்லை.மு.கா ஆதரவாளர்கள் மு.கா மீது கொண்டுள்ள கண் மூடித் தனமான பற்றினை மு.கா தவறாகப் பயன்படுத்துகிறது.ஒரு மூடிய அறைக்குள் ஒரு குறித்த சில நபர்கள் அக் குறித்த விரிதாளர்களினை தெரிவு செய்து கொண்டார்கள்.இக் குறித்த விருதைப் பெற்றவர்கள் குறித்த தெரிவு தெரிவாளர்களின்  எதிர்கால அரசியல் வாழ்விற்கு ஒளியூட்டுவதற்குத் தேவையானவர்களாம் என்ற கதையும் உண்டு.

 

விருதென்பது பகிரங்கமாக போட்டியாளர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு அவர்கள் தகுந்த விதத்தில் இலக்கிய ஆளுமை உள்ளவர்களால் ஆராயப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதுவே அக் குறித்த விருதிற்கான தரத்தினை மட்டிட்டுக் கொள்ளும் அளவு கோலும் கூட.இவ் விருதின் தரம் குறையும் போது அது அஷ்ரபின் நாமத்தினையே அகௌரவப்படுத்தப் போகிறது.ஒரு குறித்த நிகழ்வினை குறித்த சிலர் தங்களது சுய நலனிற்காக பயன்படுத்துவதனை கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும்,அவதானிக்க வேண்டும்.இப்படியான குறைபாடுள்ள விருதானது அஷ்ரபின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதானது அஷ்ரபின் பெயரிற்கு களங்கத்தினைத் தான் தோற்றுவித்துள்ளது.

 

அஷ்ரப் மு.காவினை மிகவும் திட்டமிட்டு வளர்த்திருந்தார்.தற்போது மு.கா மாற்றத்தினை நோக்கி நகர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அதன்  வீழ்ச்சிக்கு வித்திடுவதையே மேற்குறித்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.மாறுவதே மாறும் மாறாததை ஒரு போதும் மாற்ற முடியாது.

 

இக் கட்டுரை 01.12.2015 ம் திகதி செய்வாய்க் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்