பாகிஸ்தானில் தீவிரவாத குழுககளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: தலிபான் தலைவர் முல்லா படுகாயம்!

 

 

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தலிபான் தீவிரவாத இயக்கத்தை தொடங்கிய முகமது முல்லா உமர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். எனினும் அவரது மரணத்தை கடந்த ஜூலை மாதம்தான் தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். உமரின் மரணத்துக்குப்பின் பல்வேறு அதிருப்திகளுக்கு இடையே முல்லா அக்தர் மன்சூர், தலிபான் இயக்கத்தின் புதிய தலைவரானார். 

02c8c914-5269-4e69-9113-212cddb5b55f_S_secvpf

எனினும், அந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பு தொடர்பாக குழப்பமான சூழலே நிலவி வருகின்றது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் வசித்து வரும் தலிபான் தளபதியான அப்துல்லா சராடி என்பவரின் வீட்டுக்கு, கடந்த 1–ந் தேதி இரவு முல்லா மன்சூர் தனது உதவியாளர்களுடன் வந்தார். 

அங்கே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டனர். இதில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். முல்லா மன்சூர் உள்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்த முல்லா மன்சூரை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மறைவான பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த தகவலை உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளும், சில தீவிரவாதிகளும் உறுதிப்படுத்தினர். எனினும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் இதை மறுத்துள்ளார்.