மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரான முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா !

ஜவ்பர்கான்

 
இலங்கையின் சிரேஸ்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் செனட்டரும் கல்முனை மாநகர சபை மேயருமான அல்ஹாஜ் மசூர் மௌலானா நேற்றிரவு கொழும்பில் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.அன்னாரது ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை அவரது சொந்த ஊரான மருதமுனையில் நடைபெறவுள்ளது.

 
அல்ஹாஜ் மசூர் மௌலானா சிறந்த இலக்கியவாதியும் பேச்சாளருமாவார்.நாவலர் என பட்டமளித்து கௌரவிக்கப்பட்ட அவர் சிறுவயது முதல் தந்தை எஸ்.ஜே.வி.செவ்வநாயத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.அதனூடாக செனட்hராக நியமிக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இணைப்பு பாலமாக செயற்பட்டவர்.

 
பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பலம் பொருந்திய நபராக செயற்பட்ட அவர் 1988ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது வடக்கு கிழக்குமாகாண சபைத்தேர்தலில் அக்கட்சியின் மூலம் தெரிவான ஒரேயோரு உறுப்பினராக மாகாண சபை சென்றார்.

 
அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கல்முனை மாநகர மேயராகவும் கடமை புரிந்தார்.மலேசியா உலத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு உட்பட பல உலக இலக்கிய மாநாடுகளிலும் பங்கு கொண்ட அவர் நல்ல எழுத்தாளருமாவார்.