இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி யுத்தம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

நிறைவேற்று ஜனாதிபதியின் சகல அதிகாரங் களையும் பாராளுமன்றத்துக்கு வழங்கவும், அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் கீழ் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி யுத்தம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

President , maithri

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் ஊடாக நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் மக்கள் நலச் சட்டமூலங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லையெனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் 10, 15 வீதமான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனவரி 8ஆம் திகதி நான் தெரிவுசெய்யப்பட்டேன்.

தெளிவான நோக்குடனும் திட்டத்துடனும் நாம் செயற்பட்டு வருகிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைத்திருக்கிறோம். ஆனால் 2010-2015 வரை மூன்றில் இரண்டு அதிகாரத்துடனிருந்த நானும் அங்கம் வகித்த அரசாங்கம் அந்த அதிகாரத்தை மக்கள் நலனுக்கான சட்டமூலங்களை நி¨வேற்றப் பயன்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கவே சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அன்று 18ஆவது திருத்தத்தை கொண்டுவந்த அதே பாராளுமன்றத்திலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 19ஆவது திருத்தச்சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எந்த அரசாங்கத்தினாலும் நிறைவேற்ற முடியாத சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வரலாறு முழுவதும் இரு பிரதான கட்சிகளுக்கும் கரும்புள்ளிகள் இருந்துள்ளன. சில தேர்தல்களை நடத்தியமை தொடர்பில் அவப்பெயர் இருக்கிறது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதனூடாக மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகில் தலைசிறந்த நாடாக எமது நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பும் அவசியம். கடந்த காலத்தில் எமது செயற்பாடுகளால் உலகம் பிளவுபட்டது. ஐ.நா, மனித உரிமை பேரவை என்பனவும் பிளவுபட்டன.

நீண்ட கால நண்பர்கள் எம்மைவிட்டுத் தூரமாகினார்கள். ஆனால் ஜனவரி 8ஆம் திகதி மாற்றத்தின் காரணமாக எதிரிமுகாங்களோ எதிரான சர்வதேச அமைப்புக்களோ இல்லாத நாடாக நாம் மாறியிருக்கிறோம். ஐ.நாவில் வைத்து சர்வதேச அரச தலைவர்கள் எம்மை நட்புறவுடன் நோக்கினார்கள்.

பொதுநலவாய தலைமைத்துவ நாடுகள் எம்மைச் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தின. ஐ.நா காலநிலை மாநாட்டின்போது பல நாடுகள் எம்மோடு நட்புடன் நடந்துகொண்டன. பிரித்தானியப் பிரதமர் டேவிட கமரூனை சந்தித்தபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடியை நீக்குவது குறித்தும், ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தேன். மீன்பிடித் தடையை துரிதமாக நீக்க தலையீடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

மனித உரிமை, ஜனநாயகம் என்பற்றை உறுதிசெய்ய ஒத்துழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். நாம் அனைத்தையும் தவறான கோணத்தில் நோக்கக் கூடாது. யுத்தத்தின் பின் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

 மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்கவும், சகல இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் நாம் நவடிக்கை எடுத்துவருகிறோம். வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் மனதில் உள்ள சந்தேகத்தைப் போக்கி நல்லுறவை ஏற்படுத்தவும், சகல பிரச்சினைகளுக்கும் நாட்டுக்குள் தீர்வு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்கும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் திட்டமிட்டிருக்கின்றோம். ஜனாதிபதிக்குள்ள சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்துக்கு வழங்கவேண்டும். இதற்கு சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் நாம் வாக்களித்தவாறு வெளிநாட்டு விஜயங்களின்போது கடந்தகால முன்மாதிரிகளை மாற்றி குறைந்த தொகையினருடனேயே சென்று வருகிறேன்.

சிறிலங்கன் விமானச்சேவை விமானங்களை போகும் இடமெல்லாம் வைத்திருக்காமல் 280 பேர் செல்லும் விமானத்தில் பயணிகளுடன் சென்று வருகிறேன். கடந்தகாலத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கவலைப்படவேண்டும்.

ஹெலிக்கொப்டர்கள் மனைவிக்கோ குடும்பத்தினருக்கோ பயன்படுத்த நான் ஒருபோதும் இடமளிக்கவில்லை. கடந்த காலத்தில் ஹெலிக்கொப்டருக்காக வருடாந்தம் செலவிடப்பட்ட தொகை எமது நாட்டின் பொருளாதாரத்தினால் தாங்கமுடியாதது. இந்த நிலையை மாற்றியிருக்கிறோம். ஜனாதிபதி செயலக ஆளணியை குறைத்து செலவை மட்டுப்படுத்தியிருக்கிறோம்.

மரணச்சடங்களுக்கு மலர் வளையங்கள் வாங்குவதிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் நாம் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சுமத்தவில்லை. பணியாளர்கள் செய்யும் தவறுகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும். மலர்வளையம் வாங்குவதில் இடம்பெற்ற மோசடி நிறுத்தப்பட்டுள்ளது.