நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு முகாமிலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இல்லை : மங்கள சமரவீர

 

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

mangala samaraweera

அதேநேரம் நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு முகாமிலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இல்லை. புதிய இரகசிய முகாம்கள் தொடர்பில் எவராவது தகவல்களை வழங்கினால் அது குறித்து அரசாங்கம் பூரண விசாரணையை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா செயற்குழு முன்வைத்திருக்கும் அறிக்கை குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி யிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டின் எந்தவொரு பாதுகாப்புப் படை முகாம்களிலும் இரகசிய முகாம்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார். ஐ.நா செயற்குழு திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம் செய்து அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்த இரகசிய தடுப்பு முகாமை பார்வையிட்டிருந்தது.

இலங்கைக்கு வந்திருந்த அவர்களை நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இரகசியப் பொலிஸாருடன் ஐ.நா குழுவினர் திருகோணமலை கடற்படை முகாமுக்குச் சென்றிருந்தனர். இந்த முகாமை இரகசியப் பொலிஸார் ஏற்கனவே சீல் வைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் எந்தவொரு நபரையும் எவராலும் சட்ட ரீதியான முறையில் தடுத்து வைக்க முடியாது. இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதை அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அமைச்சர் கூறினார்.இதேவேளை, வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக வடக்கில் மேலும் 6000 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை மீள்குடியேற்ற அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கில் 47 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப் பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு அவசியமில்லாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேலும் காலதாமதப்படுத் தாமல் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.